தமிழகத்தில் ரூ. 3,000 கோடியில் விமான நிலைய மேம்பாட்டுப் பணிகள்!!
தமிழகத்தில் நடைபெறும் விமான நிலைய மேம்பாட்டுப் பணிகள் பற்றி...
தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களில் ரூ. 2,990.75 கோடியில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருவதாக மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் மக்களவையில் தெரிவித்துள்ளது.
தமிழக விமான நிலையங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டுப் பணிகள் குறித்து மயிலாடுதுறை எம்பி சுதா மக்களவையில் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த கேள்விக்கு மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் தரப்பில் எழுத்துப்பூர்வ பதில் அளிக்கப்பட்டுள்ளது. அதில், தமிழகத்தில் மொத்தமாக ரூ. 2,990.75 கோடியில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், “சென்னை விமான நிலைய நவீனமயமாக்கலின் இரண்டாவது கட்டமானது ரூ. 2,467 கோடியிலும், இரண்டாம் ஓடுதள பாதை மற்றும் இதரப் பணிகள் ரூ. 53.66 கோடியில் நடைபெறுகிறது.
சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் இயக்கப்படும் பகுதிகளில் வெள்ள நீர் வடிகால் பணிகள் ரூ. 209.10 கோடியிலும், முனையம் 1 மற்றும் 4 மறுசீரமைப்பு பணிகள் ரூ. 81.80 கோடியிலும் நடைபெற்று வருகின்றன.
அதேபோல், மதுரை விமான நிலையத்தில் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை கட்டுமானப் பணிகள் 99.02 கோடியிலும், திருச்சியில் புதிய விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு கோபுரம் ரூ. 80.17 கோடியிலும் கட்டப்பட்டு வருகின்றது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.