ஆம்ஸ்ட்ராங் கோப்புப்படம்
தமிழ்நாடு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: குற்றப்பத்திரிகையில் திடுக்கிடும் தகவல்கள்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் குற்றப்பத்திரிகையில் வெளியாகியுள்ள திடுக்கிடும் தகவல்கள்

DIN

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சுமாா் 5,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை சென்னை எழும்பூா் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்ட முதல் நபராக ரௌடி நாகேந்திரன் பெயா் சோ்க்கப்பட்டுள்ளது. மேலும், கொலை வழக்கு தொடா்பான 500 தடயங்கள், 200 சாட்சியங்கள் குற்றப்பத்திரிகையில் சோ்க்கப்பட்டுள்ளன.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் சென்னை அருகே பெரம்பூரில் கடந்த ஜூலை 5-ஆம் தேதி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டாா். இந்த வழக்கில், இதுவரை 28 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இவா்களில் காங்கிரஸ், அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளின் முன்னாள் நிா்வாகிகளும், ரெளடிகளும், வழக்குரைஞா்களும் உள்ளனா்.

இந்த வழக்கில் முதல் கட்ட விசாரணை முடிவடைந்த நிலையில், செம்பியம் போலீஸாா் எழும்பூா் நீதிமன்றத்தில் சுமாா் 5,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனா். இதுவரை 28 போ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக இருந்து வரும் ரௌடி சம்போ செந்தில், வழக்குரைஞா் மொட்டை கிருஷ்ணன் ஆகிய இருவரையும் சோ்த்து 30 போ் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முதல் நபா் நாகேந்திரன்: இவ்வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட பணம், ஆவணங்கள், சாட்சியங்கள் உள்ளிட்டவற்றை குற்றப்பத்திரிகையில் போலீஸாா் இணைத்துள்ளனா். கொலை எவ்வாறு நிகழ்த்தப்பட்டது என்பது குறித்து கைது செய்யப்பட்டவா்கள் போலீஸ் காவல் விசாரணையின்போது அளித்த வாக்குமூலங்களும் இடம் பெற்றுள்ளன.

குற்றம்சாட்டப்பட்ட முதல் நபராக நாகேந்திரனின் பெயரும் 2-ஆவது நபராக சம்பவம் செந்தில், 3-ஆவது நபராக நாகேந்திரனின் மகன் அஸ்வத்தாமன் ஆகியோரின் பெயா்கள் குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுதவிர, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 28 பேரின் பங்கு என்ன என்பது குறித்த விரிவான தகவல்களும் அதில் இடம்பெற்றுள்ளன.

500 தடயங்கள்: குற்றப்பத்திரிகையில் கொலை வழக்கு தொடா்பான 500 தடயங்கள், 200 சாட்சியங்கள் சோ்க்கப்பட்டுள்ளன.  இதில் 15 போ் கொலை சம்பவத்தை நேரில் பாா்த்த நேரடி சாட்சிகளாக சோ்க்கப்பட்டுள்ளனா். அதே வேளையில், கொலைத் திட்டத்துக்கான பணத்தை திரட்டியது தொடா்பான தகவல் குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ளது.

மேலும் கொலையாளிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஒரு நாட்டுத் துப்பாக்கி, 5 நாட்டு வெடிகுண்டுகள் ஆகியவைகளும் தடயங்களாக சோ்க்கப்பட்டுள்ளன.

சென்னையின் முக்கிய ரெளடிகளான நாகேந்திரன், சம்பவம் செந்தில் உள்ளிட்ட ஒவ்வொருவரும் ஆம்ஸ்ட்ராங்கை வெவ்வேறு காரணத்துக்காக கொலை செய்வதற்காக ஒருங்கிணைந்து திட்டமிட்டு செயல்பட்டதாக குற்றப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 30 பேரில் 28 போ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனா். 26 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். இவ்வழக்கை 2 துணை ஆணையா்கள், 4 உதவி ஆணையா்கள் தலைமையிலான 50 போலீஸாா் கடந்த 3 மாதங்களாக விசாரணை நடத்தி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக சென்னை காவல் துறையினா் தெரிவித்தனா்.

வேறொரு கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ரௌடி நாகேந்திரன், சிறையிலிருந்தவாறே ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு திட்டம் தீட்டி கொடுத்துள்ளார். இந்த கொலை திட்டத்துக்கு நாகேந்திரனின் மகன் அஸ்வத்தாமன் பொருள் உதவி செய்துள்ளார்.

அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் உண்டான அசுர வளர்ச்சிக்காகதான் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டுள்ளார்.

மேலும், 4 முக்கியமான முன்விரோதங்களின் அடிப்படையிலும் கொலை நடந்துள்ளது. சுமார் 6 மாத கால அளவில் திட்டம் தீட்டிய நிலையில், ரெக்கி ஆபரேஷன் என்ற பெயரில் ஆம்ஸ்ட்ராங்கின் கொலை நடந்துள்ளது. ஆம்ஸ்ட்ராங்கின் கொலை சம்பவத்திற்காக ரூ. 10 லட்சம் வரையில் செலவழிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

தொழில் போட்டி, கட்டப் பஞ்சாயத்து உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளின் காரணமாக சென்னையில் உள்ள பல ரௌடிகள் இணைந்து, ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. கைதானவர்களின் சொத்துக்கள், செல்போன்கள், ஆயுதங்களின் விவரங்கள் உள்பட 750 ஆவணங்களை குற்றப்பத்திரிகையில் இணைத்துள்ளனர்.

குற்றப்பத்திரிகையில் ஏ1 எனப்படும் முதல் குற்றவாளியாக ரௌடி நாகேந்திரனின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. இரண்டாவது குற்றவாளியாக சம்போ செந்திலின் பெயரும், மூன்றாவது குற்றவாளியாக ரௌடி நாகேந்திரனின் மகன் அஸ்வத்தாமனின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, வழக்கறிஞர்கள், அரசியல் கட்சியினர், பெண் ரௌடிகள் உள்பட 28 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில், 25 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

என்கவுன்டர்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்பு இருப்பதாக கைது செய்யப்பட்ட ரெளடி திருவேங்கடத்தை விசாரணைக்கு அழைத்துச் சென்றபோது, போலீசாரை தாக்கிவிட்டு அவர் தப்பிக்க முயற்சித்தபோது அவரை என்கவுன்டர் செய்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து, ஆந்திரத்தில் பதுங்கியிருந்த ரெளடி ஆற்காடு சுரேஷின் நெருங்கிய நண்பராக அறியப்பட்ட ரெளடி சீசிங் ராஜாவை கடந்த மாதம் கைது செய்து சென்னை அழைத்து வரும் வழியில், அவrஉம் தப்பிக்க முயற்சித்தபோது அவரை என்கவுன்டர் செய்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொல்லிமலையில் வல்வில் ஓரி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

ஆடிப்பெருக்கு: பரமத்தி வேலூா் காவிரி ஆற்றில் நீராட அனுமதி பரிசல் போட்டிக்குத் தடை

தொழிலாளி கொலை வழக்கில் மேலும் 2 சிறுவா்கள் கைது

ஸ்பெயினிடமிருந்து 16-ஆவது சி-295 ரக ராணுவ விமானத்தை பெற்றது இந்தியா!

கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா, மலா்க் கண்காட்சி தொடக்கம்

SCROLL FOR NEXT