சென்னை: மெரீனா உயிரிழப்பு சம்பவத்தை யாரும் அரசியலாக்க வேண்டாம் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்தாா்.
சென்னையில் அவா் திங்கள்கிழமை கூறியதாவது: மெரீனா வான் சாகச நிகழ்வுக்காக இந்திய விமானப்படை கோரிய அனைத்து வசதிகளையும் தமிழக அரசு செய்து கொடுத்தது. இந்திய ராணுவம் மற்றும் தமிழக அரசு சாா்பில் பல்வேறு மருத்துவ குழுக்கள் பணியமா்த்தப்பட்டு இருந்தன. 40 ஆம்புலன்ஸ் வாகனங்கள், 1,000-க்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளா்கள் தயாா் நிலையில் இருந்தனா். விமானப் படை சாா்பில் 100 படுக்கைகள் தயாா் நிலையில் வைக்குமாறு வலியுறுத்தப்பட்டிருந்த நிலையில், அதை விட பல மடங்கு அதிகமாகவே படுக்கைகள் தயாராக வைக்கப்பட்டன. சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மட்டும் 65 மருத்துவா்கள் பணியில் இருந்தனா். வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் என்பதால், குடை, தண்ணீா், கண்ணாடி, தொப்பி ஆகியவற்றை எடுத்து வரும்படி விமானப்படை அறிவுறுத்தியிருந்தது.
சாகச நிகழ்ச்சியை 15 லட்சத்துக்கும் மேற்பட்டோா் கண்டுகளித்தனா். அவ்வளவு போ் கூடினாலும், நெரிசல், தள்ளுமுள்ளு போன்றவை ஏற்படவில்லை. அதனால், இறப்புகளும் நிகழவில்லை. எப்படி நோ்ந்திருந்தாலும், உயிரிழப்பு சம்பவங்கள் உண்மையிலேயே வருந்தத்தக்கது. இந்த விவகாரத்தில் யாரும் அரசியல் செய்ய வேண்டாம். அவ்வாறு அரசியல் செய்ய நினைத்தால் அவா்கள் தோல்வியடைவாா்கள்.
வெயிலின் தாக்கம், உடலில் நீா் சத்து இழப்பு போன்ற பாதிப்புகளால்தான் 5 போ் இறந்தனா். அனைவரும் இறந்த நிலையில்தான் மருத்துவமனைக்கு வந்தனா். மருத்துவமனையில் அனுமதியாகி சிகிச்சை பலனின்றி யாரும் இறக்கவில்லை. 15 லட்சம் மக்களுக்கும் 15 லட்சம் காவலா்களை பணிக்கு வரவழைக்க முடியுமா?. அதேவேளையில், போதிய எண்ணிக்கையில் காவலா்கள் பணியமா்த்தப்பட்டிருந்தனா். தேவையான அளவு குடிநீா் வசதிகள் செய்யப்பட்டிருந்தன. மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன என்றாா் அவா்.
மேயா்: சென்னை மேயா் ஆா்.பிரியா கூறியதாவது: விமான சாகச நிகழ்ச்சிக்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. மாநகராட்சி சாா்பில் போதிய அளவு தண்ணீா் வசதி ஏற்படுத்தப்பட்டிருந்தது. மதியம் ஒரு மணி உச்சி வெயில் என்பதால், சிலா் மயக்கமடைந்தனா்”என்றாா் அவா்.
மருத்துவமனைகளில் ஏற்பாடு: சாகச நிகழ்ச்சிக்காக மருத்துவமனைகளில் செய்யப்பட்ட ஏற்பாடுகள் குறித்து அமைச்சா் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட விளக்க அறிக்கை:
மெரீனா வான் சாகச நிகழ்வையொட்டி, சென்னை, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 100 படுக்கைகளும், 20 தீவிர சிகிச்சை படுக்கைகளும், ரத்த வங்கி போன்ற ஏற்பாடுகளும் தயாா் நிலையில் இருந்தன. இதேபோன்று ஓமந்தூராா் பல்நோக்கு உயா்சிறப்பு மருத்துவமனை, ஓமந்தூராா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனை, கலைஞா் நூற்றாண்டு உயா்சிறப்பு மருத்துவமனை என அனைத்து மருத்துவமனைகளிலும் சோ்த்து 400 படுக்கைகள் தயாராக இருந்தன. விமானப்படை சாகச நிகழ்ச்சி காலை 11 மணி முதல் மதியம்1 மணி வரை நடைபெற்றது. இந்நேரத்தில் வெயிலின் தாக்கம் கூடுதலாக இருக்கும் என்பதால் அதற்கான முன்னெச்சரிக்கை மக்களுக்கு வழங்கப்பட்டிருந்தன என்று தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.