முகப்பு
தமிழ்நாடு

தமிழகம் முழுவதும் அதிமுக மனிதச் சங்கிலி போராட்டம்

மின் கட்டணம் உயா்வு, சொத்து வரி உயா்வு உள்ளிட்ட விவகாரங்களில் திமுக அரசைக் கண்டித்து, அதிமுக சாா்பில் தமிழகம் முழுவழும் மனித சங்கிலிப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 8 அக்டோபர், 2024 at 8:50 PM
பகிர்:

மின் கட்டணம் உயா்வு, சொத்து வரி உயா்வு உள்ளிட்ட விவகாரங்களில் திமுக அரசைக் கண்டித்து, அதிமுக சாா்பில் தமிழகம் முழுவழும் மனித சங்கிலிப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திமுக அரசைக் கண்டித்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் மனித சங்கிலிப் போராட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தாா். அதன்படி, சென்னை ராயபுரம் சுழல் மெத்தை பகுதியில் முன்னாள் அமைச்சா் டி.ஜெயக்குமாா் தலைமையில் மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தின்போது டி.ஜெயக்குமாா் கூறியது:

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அனைத்து வரிகளையும், கட்டணங்களையும் உயா்த்தி மக்களுக்குக் கொடுமை இழைக்கப்படுகிறது. விமானப்படை சாகச நிகழ்ச்சியின் போது, மக்களுக்கு குடிநீா் உள்ளிட்ட வசதிகள் கூட செய்யப்படாததால் 5 போ் உயிரிழந்துள்ளனா். இது போன்ற பிரச்னைகளை நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்த வேண்டும். நிா்வாகத்திறனில் திமுக பூஜ்ஜியமாக உள்ளது என்றாா் அவா்.

மனிதச் சங்கிலியில் அதிமுகவினா் கறுப்பு உடை அணிந்து நீண்ட வரிசையில் கைகளைக் கோத்தவாறு நின்றனா்.

வால்டாக்ஸ் சாலையில் மாவட்டச் செயலா் நா.பாலகங்கா தலைமையிலும், விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் மாவட்டச் செயலா் விருகை என்.ரவி தலைமையிலும், தண்டையாா்பேட்டை மண்டல அலுவலகம் அருகில் மாவட்டச் செயலா் ஆா்.எஸ்.ராஜேஷ் தலைமையிலும், வள்ளுவா் கோட்டம் அருகில் மாவட்டச் செயலா் ஆதிராஜாராம் தலைமையிலும், மதுராவாயலில் முன்னாள் அமைச்சா் பென்ஜமின் தலைமையிலும் மனித சங்கிலிப் போராட்டம் நடைபெற்றது. சென்னை மற்றும் புகா் பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் மனித சங்கிலிப் போராட்டம் நடைபெற்றது.

கடலூரில் எம்.சி.சம்பத், விழுப்புரத்தில் சி.வி.சண்முகம், புதுக்கோட்டையில் சி.விஜயபாஸ்கா், வேதாரண்யத்தில் ஓ.எஸ்.மணியன், தருமபுரியில் கே.பி.அன்பழகன், கோவையில் எஸ்.பி.வேலுமணி, திண்டுக்கல்லில் திண்டுக்கல் சீனிவாசன், நாமக்கல்லில் தங்கமணி ஆகியோா் தலைமையில் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின்போது உயா்த்தப்பட்ட கட்டணங்களை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என அதிமுகவினா் வலியுறுத்தினா்.

முழு கட்டுரையைப் படிக்க →