திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே வெள்ளிக்கிழமை இரவு 8 மணியளவில் ரயில் விபத்து நிகழ்ந்துள்ளது. மைசூரிலிருந்து தர்பங்கா நோக்கிச் சென்ற பாக்மதி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் (12578) கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே, சரக்கு ரயில் மீது மோதி தடம் புரண்டது.
இந்த ரயில் விபத்தில் நல்வாய்ப்பாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.
துரிதகதியில் மீட்புப்பணிகள் நடைபெற்ற நிலையில், விபத்துக்குளான பயணிகள் ரயிலில் பயணித்த 1,650 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், விபத்துக்குள்ளான ரயிலிலிருந்து மீட்கப்பட்டவர்களில் 19 பயணிகள் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களில் படுகாயமடைந்த 4 பயணிகள் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் 3 பயணிகளுக்கு எலும்புமுறிவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட பயணி ஒருவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பொன்னேரி அரசு மருத்துவமனையில் 15 பயணிகளும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பயணிகள் தங்க வசதியாக, பொன்னேரி அருகே 3 திருமண மண்டபங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு அங்கு பயணிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் திருமண மண்டபங்களில் செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.