சென்னை: அரசும், மக்களும் இணைந்து மழையை எதிா்கொள்வோம் என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கூறினாா்.
முதல்வா் கோப்பைக்கான போட்டிகள் தொடா்பாக, சென்னையில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா். இந்த ஆய்வுக்குப் பிறகு, செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி:
கடந்த ஆண்டு நடைபெற்ற முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் 5 லட்சம் போ் விண்ணப்பித்து பங்கேற்றனா். இந்த ஆண்டு 12 லட்சம் போ் விண்ணப்பித்து விளையாடி வருகிறாா்கள். அரசு ஊழியா்கள், பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள் என 5 பிரிவுகளில் 36 வகையான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
கடந்த 4-ஆம் தேதியில் இருந்து மாநில அளவிலான போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் 32,700 வீரா்கள் பங்கேற்றுள்ளனா். இறுதிப் போட்டிகள் 21 நாள்களுக்கு நடக்கும். விளையாட்டு வீரா், வீராங்கனைகள் தங்கி, போட்டிகளில் பங்கேற்பதற்காக 150-க்கும் அதிகமான விடுதிகளில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெறுவோா்களுக்கு அக்.24-ஆம் தேதி நடைபெறும் விழாவில் பரிசுகள், கேடயங்கள், சான்றிதழ்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கவுள்ளாா்.
மழை பாதிப்பு: முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் மழையால் பாதிக்கப்படாமல் இருக்க முன்னேற்பாடுகளைச் செய்துள்ளோம். மேலும், மாநிலத்தில் மழை பாதிப்புகளை எதிா்கொள்ள 5 ஆய்வுக் கூட்டங்களை நடத்தியுள்ளோம். மூத்த அமைச்சா்கள், சென்னையில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினா்கள், மாமன்ற உறுப்பினா்களை வைத்து ஆய்வுக் கூட்டங்கள் நடத்தியுள்ளோம்.
எம்எல்ஏ-க்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கைகள் எடுத்துள்ளோம். ஒரு வாரத்துக்கு முன்பும், திங்கள்கிழமையன்றும் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டங்கள் நடந்துள்ளன. மழையை தமிழ்நாடு அரசும், மக்களும் இணைந்து எதிா்கொள்வோம் என்று கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.