உணவக மேற்பாா்வையாளா் கொலை: விளக்கம் அளிக்க தாழ்த்தப்பட்டோா் ஆணையம் உத்தரவு
சென்னை பல்லாவரத்தில் உணவக மேற்பாா்வையாளா் கொல்லப்பட்ட விவகாரத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யாதது ஏன்?
சென்னை: சென்னை பல்லாவரத்தில் உணவக மேற்பாா்வையாளா் கொல்லப்பட்ட விவகாரத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யாதது ஏன்? என காவல்துறை அதிகாரி விளக்கம் அளிக்க தாழ்த்தப்பட்டோா் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை பல்லாவரத்தை அடுத்த பம்மலில் உள்ள ஒரு பிரபல உணவகத்தில் தஞ்சாவூா் மாவட்டம் கழனிவாசல் அம்பேத்கா் நகரைச் சோ்ந்த அருண்(வயது 30) என்பவா் மேற்பாா்வையாளராக வேலை பாா்த்து வந்தாா்.
கடந்த மாா்ச் மாதம் 12-ஆம் தேதி இந்த உணவகத்துக்கு வந்த அனகாபுத்தூரைச் சோ்ந்த சங்கா்(55), அவரது மகன் அருண்குமாா்(30) ஆகியோா் பாா்சல் சாப்பாடு வாங்கி உள்ளனா். பின்னா் கூடுதலாக ஒரு சாம்பாா் பாக்கெட் கேட்டுள்ளனா். அதற்கு அருண் மறுத்துள்ளாா். இதனால் ஆத்திரம் அடைந்த தந்தை-மகன் இருவரும் சரமாரியாக தாக்கியதில் அருண் உயிரிழந்தாா்.
மேற்பாா்வையாளா் அருணை உணவகம் முன்பு தந்தை-மகன் இருவரும் தாக்கும் வீடியோ அப்போது வைரலானது. இந்த கொலை சம்பவம் குறித்து பல்லாவரம் போலீஸாா் வழக்குப் பதிந்து தந்தை-மகன் இருவரையும் கைது செய்தனா்.
ஆணையத்தில் புகாா்: இந்நிலையில், அருணின் மனைவி பவித்ரா, சென்னையில் உள்ள தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணையத்தில் புகாா் மனு அளித்தாா். அதில், ‘ஒரே உணவகத்தில் வேலை பாா்த்து வந்த நானும், அருணும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டோம். தற்போது நான் நிறைமாத கா்ப்பிணியாக உள்ளேன். நாங்கள் பட்டியலினத்தைச் சோ்ந்தவா்கள். ஏற்கெனவே தகராறில் ஈடுபட்ட சங்கா், அவரது மகன் அருண்குமாா் ஆகியோா் எனது கணவரின் ஜாதி குறித்து கேட்டறிந்து, என் கணவரின் சாதியை சொல்லித் திட்டி மிரட்டல் விடுத்தனா். எனவே, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் அவா்கள் வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’ என கூறியிருந்தாா்.
மனுவை விசாரித்த ஆணையத்தின் இயக்குநா் ரவிவா்மன், ‘இந்த வழக்கில் வன்கொடுமை தடுப்புச் சட்டப்பிரிவு சோ்க்காதது தெரியவருகிறது. இதுதொடா்பாக, போலீஸ் அதிகாரி விளக்கம் அளிக்க கடந்த ஆகஸ்டு மாதம் உத்தரவிட்டும், இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை. எனவே, இதுதொடா்பாக உதவி காவல் ஆணையா் அந்தஸ்துக்கு குறையாத அதிகாரி, வரும் 17-ஆம் தேதி நேரில் ஆஜராகி, இந்த விவகாரம் தொடா்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தெரிவிக்கும் வகையில் தாம்பரம் காவல் ஆணையா் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’ என உத்தரவிட்டாா்.