தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் ஆளுநருக்கோ ஆளுநர் மாளிகைக்கோ எந்தத் தொடர்பும் இல்லை என ஆளுநரின் ஆலோசகர் திருஞான சம்பந்தம் விளக்கம் விளக்கம் அளித்துள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றதைத் தவிர வேறு எந்தப் பங்கும் ஆளுநருக்கு இல்லை என்றும், இந்த விவகாரம் தொடர்பாக உடனடியாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
டிடி தமிழ் தொலைக்காட்சியில் இந்தி மாத விழா கொண்டாட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. இவ்விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்றபோது, இசைக்கப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில், தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும் என்ற வரி மட்டும் விடுபட்டு, பாடல் ஒலிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
தேசிய கீதத்தில் வரும் திராவிடத்தையும் விட்டுவிட்டுப் பாடச் சொல்வாரா? என முதல்வர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிக்க | 'ஹிந்தி மாதம்' வேண்டாம்! - பிரதமருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!
இந்நிலையில், இது தொடர்பாக ஆளுநர் மாளிகையின் ஆலோசகர் திருஞான சம்பந்தம் விளக்கம் அளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சென்னை சேப்பாக்கத்தில் டிடி தமிழ் தொலைக்காட்சி ஏற்பாடு செய்திருந்த இந்தி மாத விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் குழுவினர் பாடிய தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில், திராவிட என்ற சொல் இருந்த வரி விடுபட்டுள்ளது.
குழுவினரின் கவனக் குறைவால் ஒரு வரி விடப்பட்டுள்ளது. இது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதைத் தவிர ஆளுநருக்கோ, ஆளுநர் மாளிகைக்கோ வேறு எந்தப் பங்கும் இல்லை. தமிழ் மற்றும் மாநில உணர்வுகள் மீது மிகுந்த மரியாதை கொண்டவர் ஆளுநர். அவற்றைத் தொடர்ந்து உயர் மட்டத்தில் வைத்திருப்பார் எனக் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.