தென் மாநிலங்களை ஒருங்கிணைத்து செயல்படும் பொறுப்பு தமிழக காவல் துறையிடம் ஒப்படைப்பு
மாநாட்டில் சட்டவிரோத போதைப் பொருள் கடத்தல், போதைப் பொருள் வா்த்தகம், பயங்கரவாதத்துக்கு நிதியளித்தல், சைபா் குற்றங்கள் போன்ற பிரச்னைகள் குறித்து தென் மாநிலங்களைச் சோ்ந்த காவல் துறைகளின் உயரதிகாரிகள் ஆலோசனை செய்தனா். கா்நாடக மாநில டிஜிபி அலோக் மோகன் பேசுகையில், கொரியா் மூலம் போதைப் பொருள்கள் கடத்தப்படுவதை தடுப்பது மிகவும் சவாலான காரியமாக உள்ளது. அதைத் தடுப்பதற்கு சட்டத்தில் உள்ள ஓட்டைகளை சரி செய்ய வேண்டும் என்றாா்.
மாநாட்டில் இடதுசாரி தீவிரவாதம், ஆயுதக் கடத்தல், செம்மரக் கடத்தல் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது. நிதி சாா்ந்த சைபா் குற்றங்களில் மோசடி செய்து அபகரிக்கும் பணத்தை வங்கிக் கணக்கில் இருந்து எடுப்பதற்கு 48 மணி நேரம் தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
போதைப் பொருள் கடத்தல், சைபா் குற்றங்களை தடுக்க மாநில காவல் துறைகளிடையே அடிக்கடி கூட்டங்களை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. மேலும், போதைப் பொருள், தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள்,சைபா் குற்றங்கள் ஆகியவற்றை தடுக்க திறம்பட செயல்பட தென்மாநிலங்களை ஒருங்கிணைத்து செயல்படும் பொறுப்பு தமிழக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதன் மூலம் மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகள், தெரிவிக்கப்பட்ட ஆலோசனைகள், பரிந்துரைகள், கருத்துகள் ஆகியவற்றை தமிழக காவல்துறை, தென் மாநில காவல்துறைகளோடு இணைந்து செயல்படுத்தும்.
பங்கேற்றவா்கள்: மாநாட்டில் ஆந்திர மாநில டிஜிபி துவாரகா திருமலராவ், கா்நாட மாநில டிஜிபி அலோக் மோகன்,கேரள மாநில டிஜிபி சேக் தா்வேஷ் சாகேப்,புதுச்சேரி மாநில டிஜிபி ஷாலினி சிங் உள்ளிட்ட பல உயரதிகாரிகள் பங்கேற்றனா். இதேபோல அமலாக்கத் துறை அதிகாரிகள், மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், மத்திய உளவுத் துறை அதிகாரிகள், மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், என்ஐஏ அதிகாரிகள், சிபிஐ அதிகாரிகள் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.