துணிக் கடைகளிலும், விளக்குகள் வாங்கவும், இதர பொருள்களை வாங்கவும் சந்தைகளில் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதினாலும், கடைகளில் விற்பனை களைகட்டவில்லை என்றே வியாபாரிகள் வேதனை தெரிவிக்கிறார்கள்.
தீபாவளியை முன்னிட்டு பல்வேறு பொருள்களின் விலைகளும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருவதால், மக்கள் வாங்குவது குறைந்திருப்பதாகக் கூறுகிறார்கள்.
ஒருபக்கம் ஆன்லைன் ஷாப்பிங், மற்றும் விலையேற்றம் அதில்லாமல், மாதக் கடைசியில் வந்த தீபாவளியால், மக்களின் வாங்கும் போக்கு குறைந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
தீபாவளிக்கு முன்பு வரும் கடைசி ஞாயிற்றுக்கிழமையான நேற்று, ஷாப்பிங்குக்கு பெயர்போன சௌகார்பேட்டையில், நேற்று 2 மணி வரை மக்கள் கூட்டம் குறைவாகவே இருந்ததாகவும், அதன்பிறகுதான் கூட்டம் அதிகரித்ததாகவும் நேரில் பார்த்தவர்கள் கூறுகிறார்கள்.
பண்டிகைக் கொண்டாட்டம் தொடங்கியிருக்கிறது. இது பொங்கல் பண்டிகை வரை செல்லும் என்கிறார்கள் வணிகர்கள். ஆனால் இந்த முறை, பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்திருப்பதால், 10 பொருள்கள் வாங்கி வைக்க வேண்டிய இடத்தில் பாதி பொருள்களைத்தான் வாங்கி வைக்கிறோம். இதற்கு முனபு, இரண்டு பட்டாசுப் பெட்டிகளே ரூ.7500க்கு கிடைத்துவிடும். ஆனால் தற்போது ரூ.6000க்கு ஒரு பெட்டகம்தான் கிடைக்கிறது.
இதையும் படிக்க.. தள்ளுபடி விலையில் கார்கள் விற்பனை!
என்எஸ்சி போஸ் சாலையில் உள்ள வணிகர்கள் கூறுகையில், இந்த ஆண்டு, பட்டாசு உற்பத்தி குறைந்துவிட்டதால் விலைகள் தாறுமாறாக ஏறியிருக்கிறது. எல்லா பட்டாசுகளின் விலைகளும் 5 முதல் 15 சதவீதம் அதிகரித்துள்ளன.
சிலர் எவ்வளவு அதிகரித்தாலும் வாங்கிச் செல்கிறார்கள். சிலர் அவர்கள் வாங்க வந்த அளவைக் காட்டிலும் குறைவாகவே வாங்கிச் செல்கிறார்கள். என்றாலும் இன்னும் ஒரு சில நாள்கள் இருக்கின்றன. பலரும் நெருக்கத்தில்தான் அதிகமாக வாங்குவார்கள் என்ற நம்பிக்கையும் இருப்பதாகக் கூறுகிறார்கள்.
மேலும் சில வாடிக்கையாளர்கள் கூறுகையில், பட்டாசு கடைகளில் பெரும்பாலும் முறையாக பில் கொடுப்பதில்லை. ஜிஎஸ்டி என்று சேர்த்து கணக்கிடுகிறார்கள். இதில் உண்மை என்னவென்று தெரியவில்லை. பலரும், தங்களிடமிருக்கும் சொற்ப பணத்தில் பிள்ளைகளுக்கு துணியும், பட்டாசும் வாங்கிக் கொடுக்கிறார்கள். பட்டாசு விலை அதிகரித்திருப்பதால் பெரியவர்கள் துணி வாங்குவது குறைந்துவிட்டதாகவும் மக்கள் கூறுகிறார்கள்.
விலை உயர்வு காரணமாக பட்டாசு மட்டுமல்ல, துணி, விளக்குகள், இனிப்புகளை வாங்குவதிலும் கூட குறைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. முன்பெல்லாம் தெரிந்தவர்கள், உறவினர்களுக்கு எல்லாம் இனிப்பு வாங்கிக் கொடுப்பதை வழக்கமாக வைத்திருந்த ஒருவர் கூறுகிறார், மென்பெல்லாம் 540 ரூபாய்க்கு நல்ல இனிப்பு கிடைக்கும். ஆனால், இப்போது ரூ.1000 வைத்தால்தான் ஒரு குடும்பத்துக்கு இனிப்பு வாங்க முடியும் என்பதால், அதைத் தவிர்த்து வருவதாகக் கூறுகிறார்கள்.
தீபாவளி என்றால் பலரும் தங்கம் வாங்குவார்கள். ஆனால், தங்கம் விலை ஏற்றத்தால், நகைக் கடைக்கு சாதாரண மக்களால் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. ஒரு சில ஆயிரங்கள் இருந்தால் ஒரு கிராம் நகையாவது வாங்கலாம். இனி ஒரு பத்தாயிரம் இருந்தால்தான் நகைக் கடைப் பக்கமே தலைகாட்ட முடியும் என்பதால், சாதாரண ஏழை எளிய மக்களின் வாங்கும் திறன் குறைந்து வருகிறது.
இதையெல்லாம் பார்த்தால், மறைந்த நடிகர் விவேக் சொன்னதுபோல, தீபாவளி மற்றும் அதற்கு ஆகும் செலவைப் பார்த்தால், கிருஷ்ண பரமாத்மா நரகாசுரனை கொல்லாமல் மன்னித்து விட்டிருக்கலாம் என்ற வசனம்தான் பலருக்கும் நினைவுக்கு வருகிறதாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.