கோவை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை பூ சந்தையில் விறுவிறுப்பான வியாபாரம் நடைபெற்று வருகின்றது.
பூக்களின் விலை வழக்கத்தை விட சற்று உயர்ந்தும், ஒரு சில பூக்களின் விலை மிக மலிவாக கிடைக்கின்றது.
விநாயகர் சதுர்த்தி நாளை நாடு முழுவதும் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, கடை வீதிகளில் வியாபாரம் விறு விறுப்பாக நடைபெற்று வருகின்றது. குறிப்பாக கோவையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, நகரின் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட இருக்கின்றன.
இந்நிலையில் பூ மார்க்கெட் பகுதியில் விறு விறுப்பான வியாபாரம் நடைபெற்று வருகின்றது. செவ்வந்தி, மல்லி, சம்பங்கி, அரளி என பல்வேறு பூக்களின் விலையும், வழக்கத்தை விட அதிகமாக உள்ளது.
ஓணம் பண்டிகை, விநாயகர் சதுர்த்தி என அடுத்தடுத்து விசேஷ நாள்கள் வருவதால், விலை அதிகமாக இருப்பதாகவும், கோவை பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ 800 ரூபாய், தாமரை ஒன்று 30 ரூபாய்,முல்லை கிலோ 500 ரூபாய், செவ்வந்தி கிலோ 200 ரூபாய்,ரோஸ் கிலோ 250 ரூபாய் என விலை போவதாகவும் இது வழக்கத்தை விட சற்று அதிகம்தான் எனவும் பூ மார்கெட் வியாபாரிகள் தெரிவித்தனர்.
செண்டு மல்லி, வாடாமல்லி வரத்து அதிகம் என்பதால் அந்த பூ மட்டும் கிலோ 20 ரூபாய் முதல் 30 ரூபாய் விலை போவதாகவும், இரு வாரமாக செண்டு மல்லி விலை குறைந்து இருப்பதாகவும் பூ வியாபாரிகள் தெரிவித்தனர். ஆன்லைன் பூ வியாபாரம் அதிகமானதால், உள்ளூர் சந்தைகளில் மார்க்கெட்டில் வியாபாரம் குறைவாகின்றது எனவும் பூ மார்கெட் வியாபாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.