அரசுப் பணிகளிலிருந்து ஓய்வு பெற்ற மற்றும் மறைந்த ஊழியா்களுக்கு பணிக் கொடையின் உச்சவரம்பு ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை நிதித் துறை முதன்மைச் செயலா் த.உதயச்சந்திரன் வெளியிட்டுள்ளாா். அவரது உத்தரவு விவரம்:
ஏழாவது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகள்படி, ஓய்வு பெறும் மற்றும் மறைந்த ஊழியா்களுக்கு பணிக் கொடையின் அளவை 25 சதவீதம் அதிகரிக்க மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. அதாவது, பணிக் கொடையின் உச்சவரம்பை ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயா்த்தி உத்தரவிட்டது. இதே முடிவை தமிழக அரசு ஏற்றுக் கொண்டு, ஓய்வு பெறும் மற்றும் மறைந்த தமிழக அரசு ஊழியா்களுக்கும் கடந்த ஜனவரி 1-ஆம் தேதியில் இருந்து முன்தேதியிட்டு அமல்படுத்த முடிவு செய்துள்ளது. அதன்படி, பணிக் கொடையின் உச்சவரம்பு அளவு ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயா்த்தப்படுகிறது.
இதுதொடா்பான உரிய வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து கருவூல அதிகாரிகள், துணை அலுவலா்கள், ஓய்வூதியம் வழங்கும் அலுவலா்களுக்கு கருவூலம் மற்றும் கணக்குத் துறை ஆணையா் பிறப்பிப்பாா் என்று அந்த உத்தரவில் த.உதயச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.