திமுக முன்னாள் அமைச்சர் க.சுந்தரம் காலமானார்
திமுக முன்னாள் அமைச்சர் க.சுந்தரம் (76) உடல்நலக்குறைவால் புதன்கிழமை (செப்.18) காலமானார்.
திமுக முன்னாள் அமைச்சர் க.சுந்தரம் (76) உடல்நலக்குறைவால் புதன்கிழமை (செப்.18) காலமானார்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த மீஞ்சூரைச் சேர்ந்த க.சுந்தரம் (76). தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த க.சுந்தரம் அண்ணா மற்றும் கருணாநிதியால் ஈர்க்கப்பட்டு திமுகவில் சேர்ந்தார்.
கடந்த 1984-இல் பொன்னேரி சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்ற நிலையில் 1989-இல் வென்று ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக பதவி வகித்தார்.
தொடர்ந்து 1996 சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று, பால்வளம், குடிசைப்பகுதி மாற்று வாரிய அமைச்சராக இருந்தார்.
திமுகவில் துணைப் பொதுச் செயலர், உயர்மட்ட செயற்குழு உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்த க.சுந்தரம் தற்போது ஆதிதிராவிடர் நலக்குழு அணியின் மாநில தலைவராக இருந்து வந்தார். இந்த நிலையில் உடல் நலக் குறைவால் வீட்டில் காலமானார்.
மறைந்த முன்னாள் அமைச்சர் க.சுந்தரத்துக்கு எழிலினி என்ற மனைவியும், செந்தில்குமார், தமிழ் உதயன், தமிழ்பிரியன் என்ற 3 மகன்களும் உள்ளனர். அவரது இறுதிச் சடங்கு வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.
முதல்வர் அஞ்சலி...: முன்னாள் அமைச்சர் சுந்தரத்தின் உடலுக்கு மலர்வளையம் வைத்து முதல்வர் மு.க. ஸ்டாலின், திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர். பாலு, அமைச்சர்கள், நிர்வாகிகள் திரளானோர் அஞ்சலி செலுத்தினர்.