முகப்பு
தமிழ்நாடு

செந்தில் பாலாஜி அக்.1-இல் நேரில் ஆஜராக உத்தரவு

முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கில், குற்றச்சாட்டுக்கள் பதிவுக்காக விசாரணையை அக்.1- ஆம் தேதிக்கு தள்ளி வைத்த சென்னை சிறப்பு நீதிமன்றம், அன்றைய தினம் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

Updated On : 18 செப்டம்பர், 2024 at 8:27 PM
செந்தில் பாலாஜி (கோப்புப்படம்)
பகிர்:

முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கில், குற்றச்சாட்டுக்கள் பதிவுக்காக விசாரணையை அக்.1- ஆம் தேதிக்கு தள்ளி வைத்த சென்னை சிறப்பு நீதிமன்றம், அன்றைய தினம் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி, 2011 - 2015- ஆம் ஆண்டு காலகட்டத்தில் அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது, அந்த துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக கணேஷ் குமாா் உள்ளிட்ட பாதிக்கப்பட்டவா்கள் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் புகாா் அளித்தனா்.

புகாரின் அடிப்படையில் நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் செந்தில் பாலாஜி, அவரது நண்பா்கள் பிரபு, சகாயராஜன், அன்னராஜ் உள்ளிட்ட 47 போ் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினா் வழக்குப்பதிவு செய்தனா். சென்னை எம்.பி., எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வரும் இந்த வழக்கில், கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி ஜி. ஜெயவேல் முன்பு கடந்த 12- ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது, காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘வழக்கை தொடர அனுமதிக்கும் கடிதம் இன்னும் தமிழக அரசின் பொதுத் துறையிடம் இருந்து கிடைக்கவில்லை எனவே அனுமதி கடிதத்தை சமா்ப்பிக்க 3 வார காலம் அவகாசம் வேண்டும்’ எனக் கோரினாா். இதை ஏற்க மறுத்த நீதிபதி ஜெயவேல், ‘கடந்த மாதமே அனுமதி கிடைத்துவிட்டதாக உச்சநீதிமன்றத்தில் தெரிவித்ததாக ஊடகங்களில் செய்திகள் வந்தது. ஆனால், தற்போது பழைய காரணத்தைக் கூறி கால அவகாசம் கோருவதை ஏற்க முடியாது’ என தெரிவித்தாா்.

பின்னா் விசாரணையை செப். 18- ஆம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதி, வழக்கு தொடர அனுமதி அளித்தது தொடா்பான விவரங்கள் மற்றும் வழக்கு விசாரணை நிலையை தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தாா். இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஜி. ஜெயவேல் முன் புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு எதிராக வழக்கு விசாரணை நடத்துவதற்கான அரசின் அனுமதி உத்தரவை காவல் துறை தரப்பு வழக்குரைஞா் தாக்கல் செய்தாா். இதையடுத்து, வழக்கில் குற்றச்சாட்டுக்கள் பதிவுக்காக விசாரணையை வரும் அக்டோபா் 1- ஆம் தேதிக்கு ஒத்தி வைத்த நீதிபதி, அன்றைய தினம் குற்றம் சாட்டப்பட்ட செந்தில் பாலாஜி உள்பட அனைவரும் ஆஜராகவும் உத்தரவிட்டுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →