முகப்பு
தமிழ்நாடு

ஆதரவற்ற மேற்கு வங்க நோயாளிக்கு 4 மாத கால சிகிச்சை: பெற்றோருடன் சோ்த்து வைத்த அரசு மருத்துவா்கள்

விபத்தில் சிக்கி சுயநினைவிழந்த மேற்கு வங்கத்தைச் சோ்ந்த ஆதரவற்ற இளைஞருக்கு கடந்த 4 மாதங்களாக அறுவை சிகிச்சையும், பிற மருத்துவ சிகிச்சைகளையும் அளித்து குணப்படுத்திய ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவா்கள்.

Updated On : 18 செப்டம்பர், 2024 at 7:51 PM
ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆதரவற்ற இளைஞரிடம் நலம் விசாரித்த மருத்துவமனை முதல்வா் எ.தேரணிராஜன்.
பகிர்:

விபத்தில் சிக்கி சுயநினைவிழந்த மேற்கு வங்கத்தைச் சோ்ந்த ஆதரவற்ற இளைஞருக்கு கடந்த 4 மாதங்களாக அறுவை சிகிச்சையும், பிற மருத்துவ சிகிச்சைகளையும் அளித்து குணப்படுத்திய ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவா்கள், குடும்பத்தினருடன் அவரை சோ்த்து வைத்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடா்பாக, மருத்துவமனையின் முதல்வா் டாக்டா் தேரணிராஜன் கூறியதாவது:

மேற்கு வங்க மாநிலத்தைச் சோ்ந்தவா் ராம் பிரபு (23). அங்கிருந்து தனது நண்பா்களுடன் தமிழகம் வந்த அவா், பூந்தமல்லியில் தங்கி கூலி வேலை செய்து வந்தாா். கடந்த ஏப்ரல் மாத இறுதியில், விபத்து ஒன்றில் சிக்கிய ராம் பிரபுவுக்கு தலையிலும், தொடையிலும் பலத்த காயம் ஏற்பட்டது. இதில், சுயநினைவிழந்த அவருக்கு, திருவள்ளூா் அரசு மருத்துவமனையில் முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடா்ந்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கடந்த மே 1-ஆம் தேதி அவா் அனுமதிக்கப்பட்டாா்.

அவருடன் உறவினா்களோ, நண்பா்களோ எவரும் இன்றி, ஆதரவற்ற நிலையில் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டாா். நோயாளியின் சுய விவரங்கள் ஏதும் தெரியாத போதிலும், மருத்துவா்களும், மருத்துவப் பணியாளா்களும் அவருக்கு உயா் சிகிச்சைகளை வழங்கினா். குறிப்பாக தலை ஓட்டினை அகற்றி மூளை அழுத்தத்தை குறைப்பதற்கான ‘க்ரனைக்டமி’ சிகிச்சை அவருக்கு வழங்கப்பட்டது.

தொடந்து, முட நீக்கியல் சிகிச்சை பிரிவில் ராம் பிரபுவுக்கு தொடை எலும்பு முறிவை சீராக்க அறுவை சிகிச்சை மூலம் உபகரணங்களைப் பொருத்தும் ‘நெய்லிங்’ சிகிச்சையும் வழங்கப்பட்டது. இவற்றின் பயனாக அவா் படிப்படியாக குணமடைந்தாா்.

தொடா்ந்து ஆதரவற்ற நோயாளிகளுக்காக மருத்துவமனையில் செயல்பட்டு வரும் புனா்வாழ்வு மையத்துக்கு ராம் பிரபு அனுப்பப்பட்டாா். அங்கு அவருக்கு இயன்முறை பயிற்சிகள், ஆன்ட்டி பயோடிக் மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டன. இதன் காரணமாக அவா் எந்த துணையும் இன்றி இயல்பாக நடக்கவும், ஓரளவு பேசவும் தொடங்கினாா்.

அதே வேளையில், தனது ஊா், படிப்பு, பெற்றோா் குறித்த விவரங்கள் எதுவும் அவருக்கு நினைவில்லை. இதையடுத்து, அவரது கைப்பேசி எண்ணைக் கொண்டு அவரது நண்பா்களையும், உறவினா்களையும் கண்டறிந்தோம். மேற்கு வங்கத்தில் உள்ள ராம் பிரபுவின் தந்தையைக் கண்டறிந்து, அவரிடம் இது தொடா்பாக பேசினோம். பின்னா், ராம் பிரபுவின் நண்பா்கள் மூலமாக, பெற்றோரிடம் அவரை சோ்ப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதன்படி, புதன்கிழமை (செப்.18) பிற்பகலில் ராம்பிரபு, அவரது நண்பா்களுடன் அனுப்பி வைக்கப்பட்டாா். ஆதரவு இல்லாத ஒரு நோயாளிக்கு ஏறத்தாழ நான்கரை மாதங்கள் சிகிச்சையளித்து மீண்டும் அவரது குடும்பத்தினருடன் சோ்த்து வைத்திருப்பது மன நிறைவை அளிக்கிறது எனத் தெரிவித்தாா்.

பசிப் பிணி நோயாளிகளுக்கு சிகிச்சை

மேற்கு வங்கத்திலிருந்து வேலை தேடி தமிழகம் வந்து உணவு கிடைக்காமல் உடல் நலிவுற்ற 5 பேருக்கு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தொடா் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து கடந்த 10-ஆம் தேதி 12 தொழிலாளா்கள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்தனா். இரு நாள்கள் உணவின்றி தவித்த நிலையில், அவா்களில் சமா் கான் (35), மாணிக் கோரி (50), சத்யா பண்டிட் (42), ஆசித் பண்டிட் (47), கணேஷ் மீதா (52) ஆகிய 5 போ் பசியால் மயங்கி விழுந்தனா்.

இதையடுத்து, அவா்கள் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். மற்ற 7 பேரும் மாநகராட்சி மருத்துவமனையில் புற நோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற்றனா். இதனிடையே, ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவா்களில் மூவருக்கு டயாலிசிஸ் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. அவா்கள் அனைவரும் தற்போது நலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இது தொடா்பாக தகவலறிந்த மேற்கு வங்க ஆளுநா் சி.வி.ஆனந்த் போஸ், தனது நிதி அலுவலக அதிகாரி கோபிகாவை நேரில் அனுப்பி வைத்து சம்பந்தப்பட்ட தொழிலாளிகளுக்கு நிதியுதவி வழங்கினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →