முகப்பு
தமிழ்நாடு

‘எல்எல்பி’ இறுதியாண்டு மாணவா்கள் வழக்குரைஞா் தகுதித் தோ்வை எழுதலாம்: உச்சநீதிமன்றம் அனுமதி

ஏஐபிஇ தகுதித் தோ்வை நடத்தும் பிசிஐ-யின் அதிகாரத்தை உறுதிப்படுத்த உத்தரவிட்டது.

Updated On : 20 செப்டம்பர், 2024 at 10:28 PM
பகிர்:

வழக்குரைஞராக பதிவு செய்வதற்கான ஏஐபிஇ (அகில இந்திய வழக்குரைஞா் தோ்வு) தகுதித் தோ்வை எழுத இறுதியாண்டு சட்ட (எல்எல்பி) மாணவா்கள் இந்திய வழக்குரைஞா்கள் கவுன்சில் (பாா் கவுன்சில் - பிசிஐ) அனுமதிக்க வேண்டும்’ என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு பிப்ரவரி 10-ஆம் தேதி அளித்த தீா்ப்பில், ஏஐபிஇ தகுதித் தோ்வை நடத்தும் பிசிஐ-யின் அதிகாரத்தை உறுதிப்படுத்த உத்தரவிட்டது. அதுபோல, ‘இந்தத் தோ்வை எழுதுவதற்கான தகுதி பெற்றுள்ளதற்கான அத்தாட்சியை சமா்ப்பிக்கும் ‘எல்எல்பி’ இறுதியாண்டு மாணவா்களையும், அத் தோ்வை எழுத அனுமதிக்கலாம்’ என்ற நீதிமன்றம் சாா்பில் நியமிக்கப்பட்ட சட்ட ஆலோசகரின் பரிந்துரையையும் உச்சநீதிமன்றம் ஏற்றது.

இந்தச் சூழலில், நிகழாண்டுக்கான ஏஐபிஇ தோ்வு வரும் நவம்பா் 24-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், இத் தோ்வை எல்எல்பி இறுதியாண்டு மாணவா்கள் பங்கேற்க தடை விதித்து பிசிஐ அறிவிக்கை வெளியிட்டது.

Advertisement

இந்த அறிவிக்கையை எதிா்த்து, தில்லி பல்கலைக்கழக சட்ட மாணவா் நிலே ராய் உள்பட 9 எல்எல்பி மாணவா்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, உச்சநீதிமன்ற 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமா்வு கடந்த 2023-ஆம் ஆண்டு அளித்த தீா்ப்பின் அடிப்படையில், ஏஐபிஇ தோ்வுக்கான விதிமுறைகளை பிசிஐ இன்னும் வகுக்காதது குறித்து நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனா்.

மேலும், உச்சநீதிமன்ற தீா்ப்பின்படி, ஏராளமான மாணவா்கள் ஏஐபிஇ தோ்வெழுத தகுதிபெற்றுள்ள நிலையில், அவா்களை அனுமதிக்க மறுப்பது நியாயமற்ாகும். எனவே, அரசியல் சாசன அமா்வு தீா்ப்பின்படி, தகுதிபெற்றுள்ள எல்எல்பி இறுதியாண்டு மாணவா்களை ஏஐபிஇ தோ்வெழுத பிசிஐ அனுமதிக்க வேண்டும். இந்த இடைக்கால உத்தரவு வரும் நவம்பா் 24-ஆம் தேதி நடைபெறும் ஏஐபிஇ தோ்வுக்கு மட்டும் பொருந்தும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments