சென்னை காவல் ஆணையராக அருண் பொறுப்பேற்ற பிறகு 3ஆவது என்கவுன்ட்டர் நடந்துள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரௌடி திருவேங்கடம் ஜூலை 14ஆம் தேதி என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டார். செப்டம்பர் 18ஆம் தேதி ரௌடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். திருவேங்கடம், காக்கா தோப்பு பாலாஜியைத் தொடர்ந்து இன்று ரௌடி சீசிங் ராஜா என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டுள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரெளடி சீசிங் ராஜா சென்னை நீலாங்கரை அருகே திங்கள்கிழமை என்கவுன்டர் செய்யப்பட்டார். ஆற்காடு சுரேஷின் நெருங்கிய நண்பரான சீசிங் ராஜா மீது 5 கொலை வழக்குகள் உள்பட 32 வழக்குகள் உள்ளன. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 29வது நபராக சீசிங் ராஜா நேற்று (செப். 22) கைது செய்யப்பட்டிருந்தார்.
தொடர்ந்து, பதுக்கி வைத்திருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்ய காவல் துறையினர் அவரை அழைத்துச் சென்றபோது காவல் துறையினரைத் தாக்கித் தப்பிக்க முயன்றதாகவும், அப்போது தற்காப்புக்காக சுட்டதில் சீசிங் ராஜாவுக்கு வயிறு மற்றும் நெஞ்சுப்பகுதியில் குண்டு பாய்ந்ததாகவும் காவல் துறை தரப்பில் கூறப்படுகிறது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5-ஆம் தேதி சென்னை பெரம்பூரில் உள்ள அவரது வீடு அருகே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். தலைநகரிலேயே இந்த அசம்பாவிதம் நடைபெற்றதால் தமிழக சட்டம் - ஒழுங்கு குறித்து எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன.
இதையடுத்து சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த சந்தீப் ராய் ரத்தோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்த அருண் சென்னை மாநகர காவல் ஆணையராக கடந்த ஜூலை 8ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.