கேரள மாநிலத்தில், ஏடிஎம்களில் கொள்ளையடித்துவிட்டு தமிழகம் வழியாக வட மாநிலத்துக்கு தப்பவிருந்த கொள்ளையர்கள் வந்த கண்டெய்னர் லாரியை தமிழக காவல்துறையினர் சுற்றி வளைத்துபிடித்தபோது, தப்பியோட முயன்ற கொள்ளையன் என்கவுன்டர் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கண்டெய்னர் லாரியில் கட்டுக் கட்டாக பணம், ஆயுதங்கள், கார் இருப்பதாகவும், கண்டெய்னர் லாரியை பாதுகாப்புக் கருதி, தனியார் மில்லுக்கு கொண்டு சென்று போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிடிபட்ட லாரி, ராஜஸ்தான் பதிவெண்ணுடன் இருந்துள்ளது. லாரிக்குள், ஆயுதத்துடன் கொள்ளையர்கள் பிடிபட்டுள்ளனர். கேரள மாநிலம் திரிச்சூர் பகுதியில் அதிகாலை 4 - 4.30 மணிக்குள் அடுத்தடுத்து மூன்று ஏடிஎம்களில் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. எனவே, இவர்கள் கேரளத்தில் பணத்தைக் கொள்ளையடித்துக்கொண்டு தமிழகம் வழியாக தப்ப முயன்ற கொள்ளையர்கள் என்று சந்தேகிக்கப்படுகிறது.
சந்தேகத்துக்கு இடமான வகையில், தேசிய நெடுஞ்சாலை வழியாக ஒரு கண்டெய்னர் லாரி வந்து கொண்டிருப்பதாகத் தகவல் வந்தது. தமிழகத்தில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே காவல்துறையினர் ஜீப் மற்றும் இருசக்கர வாகனங்களால் சுற்றிவளைக்கப்பட்ட அந்த கண்டெய்னர் லாரியில், வட மாநிலத்தைச் சேர்ந்த ஏழு பேர் கொண்ட கும்பல் இருந்துள்ளனர். கொள்ளையர்கள் கொள்ளையடிக்கப் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் சொகுசு கார் ஒன்றும் இருந்துள்ளது.
கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் கல்லூரி அருகே லாரி சென்றபோது குமாரபாளையம் காவல் ஆய்வாளர் தவமணி தலைமையிலான போலீஸார் அவர்களை பிடிக்க முற்பட்டனர். அந்த லாரியை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து வெப்படை செல்லும் சாலையில் கொண்டு சென்றனர். போலீஸார் சுற்றி வளைத்தபோது, லாரியில் வைத்திருந்த கற்களால் போலீஸாரை அவர்கள் கடுமையாக தாக்கினர். இதில், ஆய்வாளர் தவமணி, காவலர் ரஞ்சித் குமார் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. லாரியின் பின்புற கதவை திறந்த நிலையில், அங்கிருந்து அடர்ந்த முள்ளு காட்டுக்குள் தப்பியோடிய 7 பேரில் ஒருவரை போலீஸார் துப்பாக்கியால் சுட்டதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து காயமடைந்த போலீஸார், அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். என்கவுன்டர் செய்யப்பட்ட கொள்ளையனின் உடல், கூறாய்வுக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்படுகிறது. இந்த சம்பவத்தால் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கண்டெய்னர் லாரி மீது சந்தேகம் ஏன்?
கேரள மாநிலத்திலிருந்து நாமக்கல் மாவட்டம் வழியாக தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக வந்த கண்டெய்னர் லாரி, வாகனங்கள் மீது தொடர்ச்சியாக மோதியதையடுத்து, அந்த லாரியை போலீஸார் மடக்கிப் பிடித்தனர்.
லாரியில், பணம், ஆயுதங்கள், கார் உள்ளிட்டவை இருந்ததாக தெரியவந்துள்ளது. கேரள மாநிலம் திருச்சூரில் மூன்று வங்கி ஏடிஎம்களில் வியாழக்கிழமை இரவு பணத்தை கொள்ளையடித்த ஒரு கும்பல், கண்டெய்னர் லாரியில் கோவை, ஈரோடு மாவட்டம் வழியாக தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை காலை 9 மணி அளவில் வந்து கொண்டிருந்தது. அந்த கண்டெய்னர் லாரி சாலையில் வந்த இரு சக்கர வாகனம், கார்களை இடித்து தள்ளியவாறு வேகமாக வந்தது. பச்சாம்பாளையம் பகுதியில் நடைபெற்ற இந்த சம்பவத்தை பார்த்த வாகன ஓட்டிகள் நாமக்கல் மாவட்ட காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.ராஜேஷ் கண்ணன் உத்தரவின் பேரில் திருச்செங்கோடு துணை கண்காணிப்பாளர் இமயவரம்பன் தலைமையிலான போலீஸார் விரைந்து சென்று வெப்படை பகுதியில் அந்த கண்டெய்னர் லாரியை மடக்கி பிடித்தனர்.
இந்த கண்டெய்னர் லாரியில் இருந்தவர்கள் ராஜஸ்தான் மற்றும் ஹரியாணாவைச் சேர்ந்த கொள்ளையர்கள் என்று முதற்கட்ட விசாரணையில் கூறப்படுகிறது. இவர்கள் பவாரியா கொள்ளையர்களாக இருக்கக் கூடும்என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
பவாரியா கொள்ளையர்கள் பொதுவாக வட இந்திய மாநிலங்களைச் சேர்ந்த ஒரு பெரிய குழுவாக, லாரி அல்லது கண்டெய்னர் லாரிகள் மூலம் போக்குவரத்துத் தொழிலில் ஈடுபடுவது போல தென்னிந்திய மாநிலங்களுக்கு வந்து, இங்கு ஒரே நேரத்தில் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களை செய்து பெரிய தொகையுடன் சொந்த மாநிலங்களுக்குத் தப்பியோடிவிடுவார்கள்.
தற்போது கண்டெய்னர் லாரியுடன், வட மாநில கொள்ளையர்கள் பிடிபட்டிருப்பதும், ஒரே நேரத்தில் மூன்று ஏடிஎம்களில் பணத்தைக் கொள்ளையடித்திருப்பதும் இவர்கள் பவாரியா கொள்ளையர்களாக இருக்கக் கூடும் என்று சந்தேகம் எழுந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.