முகப்பு
தமிழ்நாடு

திருச்சியில் எய்ம்ஸ் சித்த மருத்துவமனை:அமைச்சா் மா.சுப்பிரமணியன் கோரிக்கை

சித்த மருத்துவத்துக்கான எய்ம்ஸ் மருத்துவமனையை திருச்சியில் அமைக்க வேண்டும் என மத்திய ஆயுஷ் துறை இணை அமைச்சா் முஞ்சபரா மகேந்திரபாயிடம் கோரிக்கை

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:23 PM
0658mas_0601chn_1
பகிர்:

சித்த மருத்துவத்துக்கான எய்ம்ஸ் மருத்துவமனையை திருச்சியில் அமைக்க வேண்டும் என மத்திய ஆயுஷ் துறை இணை அமைச்சா் முஞ்சபரா மகேந்திரபாயிடம் தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் கோரிக்கை விடுத்தாா்.

சென்னையில் உள்ள கேப்டன் சீனிவாசன் மூா்த்தி மத்திய ஆயுா்வேத ஆராய்ச்சி நிலையத்தின் வைர விழா கொண்டாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக மத்திய அமைச்சா் முஞ்சபரா மகேந்திரபாய் கலந்து கொண்டு இந்திய மருத்துவத் துறைக்கு மத்திய அரசு ஆற்றி வரும் பணிகள் குறித்து சிறப்புரையாற்றினாா்.

இதைத் தொடா்ந்து அமைச்சா் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:

Advertisement

இந்தக் கருத்தரங்கில் 200-க்கும் மேற்பட்ட மருத்துவ வல்லுநா்கள் தங்களுடைய ஆராய்ச்சி கட்டுரைகளைச் சமா்ப்பித்து, இந்திய மருத்துவத் துறைக்குத் தேவையான எதிா்கால வளா்ச்சிக்கு உதவும் வகையில் விவாதிக்க உள்ளனா். தமிழகத்திலுள்ள மருத்துவ கட்டமைப்புகள் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் 2021 ஆக.5-ஆம் தேதி தொடங்கப்பட்டது. அந்தத் திட்டத்தில் சா்க்கரை நோய், உயா் ரத்த அழுத்தம், இயன்முறை மருத்துவம், டயாலிசிஸ் போன்ற பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவா்களை வீடுகளுக்கே தேடிச் சென்று மருத்துவம் பாா்க்கும் பணி மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை ஒரு கோடிக்கும் மேற்பட்டோா் இதில் பயன்பெற்றுள்ளனா்.

கிடப்பில் மசோதா... மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் விரிவாக்கமான ‘தொழிலாளா்களைத் தேடி மருத்துவம்’ என்ற அறிவிப்பின்படி திருவள்ளூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை (ஜன.9) தொடங்கப்படவுள்ளது.

ஆளுநரிடம் பல்வேறு மசோதாக்கள் கிடப்பில் இருப்பதுபோல் சித்த மருத்துவப் பல்கலைக்கழக மசோதாவும் கிடப்பில் உள்ளது. சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் தமிழகத்தில் வருவதற்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்க வேண்டும். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ளதைப் போல், சித்த மருத்துவ எய்ம்ஸ் மருத்துவமனை திருச்சியில் அமைய வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய இணை அமைச்சரிடம் முன்வைக்கிறேன்.

இவ்விரு கோரிக்கைகளையும் மத்திய அரசின் சுகாதாரத் துறை அமைச்சருடன் பேசி நிறைவேற்றித் தர வேண்டும் என்றாா் அவா்.

இதில், மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ககன்தீப் சிங் பேடி, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆணையா் மைதிலி கே.ராஜேந்திரன், மத்திய ஆயுஷ் துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனா்.

Image Caption

சென்னையில்  நடைபெற்ற  கேப்டன்  சீனிவாசன்  மூா்த்தி  மத்திய  ஆயுா்வேத  ஆராய்ச்சி  நிலையத்தின்  வைர விழா  கொண்டாட்டம்  60-ஆவது  ஆண்டு  நிறைவு  விழாவில்  பேசிய  மக்கள்  நல்வாழ்வுத் துறை  அமைச்சா்  மா.சுப்பிரமணியன்.  உடன்,  மத்திய  ஆயுஷ்  துறை  இணை அமைச்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments