பாஜக மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டு, சான்றிதழ் அளிக்கப்பட்டது.
சென்னை அருகே வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் நயினார் நாகேந்திரனுக்கு இந்த சான்றிதழ் அளிக்கப்பட்டது. பாஜக தேசிய நிர்வாகிகள் கிஷன் ரெட்டி, தருண் சுக் உள்ளிட்டோர் சான்றிதழை அளித்தனர்.
அப்போது பாஜக மாநிலப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, நயினார் நாகேந்திரனுக்கு துண்டு, பிரசாதம் வழங்கினார். பாஜகவின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நயினார் நாகேந்திரனை ஆரத் தழுவி அண்ணாமலை வாழ்த்து தெரிவித்தார். நிகழ்ச்சியில் தமிழிசை சௌந்தரராஜன், எல்.முருகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தொடர்ந்து பாஜக மாநிலத் தலைவராக அறிவிக்கப்பட்டதும், கட்சியினரிடம் நயினார் நாகேந்திரன் வாழ்த்துப் பெற்றார். நாடு முழுவதும் பாஜக உள்கட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் கிளை முதல் மாவட்டத் தலைவர் வரையிலான பதவிகளுக்கு ஏற்கெனவே தேர்தல் நிறைவுபெற்றிருந்தது.
இதனிடையே, தமிழக பாஜக தலைவர் பதவிக்கு போட்டியிடுவோர் வெள்ளிக்கிழமை தங்களது விருப்ப மனுக்களை அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, சென்னை கமலாலயத்தில் தமிழக பாஜக அமைப்புத் தேர்தலுக்கான தேர்தல் அதிகாரி சக்கரவர்த்தியிடம், தமிழக பாஜக சட்டப்பேரவைக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் மட்டும்தான் விருப்ப மனுவை தாக்கல் செய்தார்.
அவரது விருப்ப மனுவில், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை, மூத்த தலைவர்கள் ஹெச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை செளந்தரராஜன் , வானதி சீனிவாசன் உள்ளிட்ட 10 பேர் முன்மொழிந்து கையொப்பமிட்டிருந்தனர்.
இதையடுத்து, தமிழக பாஜகவின் 10-ஆவது தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்படுவது உறுதியானது. 8 ஆண்டுகளுக்கு முன்பு அதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் இவர் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
யார் இந்த நயினார் நாகேந்திரன்? திருநெல்வேலி சட்டப்பேரவை தொகுதியில் இருந்து 2001, 2011, 2021 பேரவைத் தேர்தல்களில் வெற்றிபெற்ற அவர், ஜெயலலிதா அமைச்சரவையில் மின்துறை, தொழில்துறை அமைச்சராகப் பதவி வகித்தார். 8 ஆண்டுகளுக்கு முன்பு பாஜகவில் இணைந்த அவர் 2019, 2024 மக்களவைத் தேர்தல்களில் ராமநாதபுரம், திருநெல்வேலி தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்தார்.
திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே தண்டையார்குளத்தைச் சேர்ந்த நயினார் நாகேந்திரனுக்கு மனைவி சந்திரா, மகன்கள் நயினார் பாலாஜி, விஜய் சண்முக நயினார், மகள் காயத்திரி ஆகியோர் உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.