சிவகங்கை: திருப்பத்தூர் அருகே உள்ள புழுதிபட்டி வில்லி கண்மாயில் பாரம்பரிய மீன்பிடித் திருவிழா நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே புழுதிபட்டி வில்லி கண்மாயில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடைபெற்ற பாரம்பரிய மீன்பிடித் திருவிழாவில் குடும்பத்துடன் திரண்டு வந்த கிராம மக்கள் கண்மாய்க்குள் வலைகளுடன் இறங்கி கட்லா, ரோகு, விரால், கண்டை மீன்களை அள்ளிச் சென்றனர்
புழுதிபட்டியில் உள்ள வில்லி கண்மாய் பெரிய கண்மாய் ஆகும். இதிலிருந்து விவசாயப் பணிகளுக்காக தண்ணீர் திறக்கப்பட்டு விவசாயப் பணிகள் நிறைவடைந்தன.
இந்நிலையில், கோடைகாலம் தொடங்கி வெப்பம் அதிகரித்து வருவதால் கண்மாயில் தண்ணீர் குறையத் தொடங்கியது.
இதையடுத்து ஊர் முக்கிய பிரமுகர்கள் ஒன்றுகூடி மீன்பிடித் திருவிழா நடத்த முடிவு செய்தனர். அதன்படி, இலவச மீன்பிடித் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடப்பதாக சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதன்படி, இன்று (ஏப்.13) அதிகாலை முதலே 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஆயிரக்கணக்கானோர் கண்மாய் இருபுறமும் காத்திருந்தனர்.
அங்கு வந்த ஊர் முக்கிய பிரமுகர்கள் மலையாள கருப்புசாமி கோயில் நோக்கி கையெடுத்து கும்பிட்டு நல்ல மழை பொழிந்து விவசாயம் செழிக்கவேண்டும் என வேண்டிய பின்னர், கண்மாய் கரையில் நின்று வெள்ளை துண்டு வீசி மீன்பிடித் திருவிழாவை தொடக்கி வைத்தனர்.
வெள்ளை வீசிய உடனே கண்மாய் இருபுறமும் காத்திருந்த பொதுமக்கள், மின்னல் வேகத்தில் கண்மாய்க்குள் இறங்கி வலை, ஊத்தா, தூரி,கச்சா உள்ளிட்ட உபகரணங்களைக் கொண்டு மீன்களைப் பிடித்தனர்.
இதில் கெண்டை, கட்லா, சிசி, பாப்புலட்,விரால் போன்ற பெரிய மீன்கள் சிக்கின. வந்திருந்த அனைவருக்கும் ஏமாற்றமின்றி பெரிய மீன்கள் கிலோ கணக்கில் சிக்கியதால் மகிழ்ச்சியுடன் அனைவரும் வீடுகளுக்கு திரும்பிச் சென்றனர்.
இதையும் படிக்க: தூத்துக்குடி கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை பவனி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.