சென்னை: தமிழக உள்மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை (ஏப்.15) முதல் ஏப்.18-ஆம் தேதி வரை வெப்பம் சற்று அதிகரிக்கும். இருப்பினும் சில மாவட்டங்களில் மிதமான மழைபெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் திங்கள்கிழமை அதிகபட்ச வெப்பநிலை ஈரோட்டில் 101.18 டிகிரி ஃபாரன்ஹீட்டும், திருச்சி மற்றும் திருத்தணியில் தலா 100 டிகிரி ஃபாரன்ஹீட்டும் வெப்பம் பதிவானது. மேலும், செவ்வாய்க்கிழமை (ஏப்.15) முதல் ஏப்.18-ஆம் தேதி வரை தமிழக உள்மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும். சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஏப்.15-இல் அதிகபட்ச வெப்பநிலை 101 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி இருக்கும்.
மழைக்கு வாய்ப்பு: மன்னாா் வளைகுடாவில் கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, ஏப்.15 முதல் 18-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
மழை அளவு: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை வரை கன்னியாகுமரி மாவட்டம், பெருஞ்சாணி அணை மற்றும் புத்தன் அணை பகுதிகளில் தலா 70 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மேலும், துறையூா் (திருச்சி), நடுவட்டம் (நீலகிரி) ஆகிய பகுதிகளில் தலா 40 மி.மீ. பதிவானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.