ஸ்ரீகனிஷ்கா - பல்ராம் சிங் 
தமிழ்நாடு

இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் மகள் கொடுத்திருக்கும் வரதட்சணைப் புகார்! பின்னணி என்ன?

இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் மகள் ஸ்ரீகனிஷ்கா, கணவர் மீது வரதட்சணைப் புகார்

இணையதளச் செய்திப் பிரிவு

திருநெல்வேலியில் இயங்கி வரும் இருட்டுக்கடை அல்வா கடையின் உரிமையாளர் மகள் ஸ்ரீகனிஷ்கா, தனது கணவர் வீட்டினர் மீது வரதட்சணைப் புகார் அளித்திருக்கிறார்.

திருநெல்வேலியில் புகழ்பெற்ற இருட்டுக்கடை அல்வா உரிமையாளரான கவிதா சிங்கின் மகள் ஸ்ரீ கனிஷ்கா தனது கணவர் வீட்டினர், வரதட்சணையாக இருட்டுக்கடை அல்வா உரிமையை தங்களுக்கு மாற்றித் தரும்படி கொலை மிரட்டல் விடுப்பதாக திருநெல்வேலி காவல் ஆணையரிடம் தெரிவித்திருக்கும் புகார் மனுவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நெல்லை டவுனில் உலகப் புகழ்பெற்ற இருட்டுக்கடை அல்வா கடையை நடத்தி வரும் ஹரிசிங், கவிதா தம்பதியினரின் மகள் ஸ்ரீ கனிஷ்கா, தனக்கு கணவர் வீட்டில் இருந்து வரதட்சனை கேட்டு கொலை மிரட்டல் விடுவதாக நெல்லை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து இருட்டுக்கடை உரிமையாளர் கவிதா ஹரிசிங் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, எனது மகள் ஸ்ரீ கனிஷ்காவுக்கும் கோயம்புத்தூரை சேர்ந்த உறவினர் மகன் பல்ராம் சிங் என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் இரண்டாம் தேதி திருமணம் பிரம்மாண்டமாக நடத்தி வைத்தோம்.

ஆனால் திருமணம் ஆகி ஒரு மாதம் காலம் கூட இல்லாத நிலையில் என் மகளை வரதட்சனை கேட்டு அவரது கணவர் பல்ராம் சிங் கொடுமைப்படுத்தி இருக்கிறார். அவரது குடும்பத்தினரும் என் மகளிடம் கூடுதல் வரதட்சனை வேண்டும் விலை உயர்ந்த 1.5 கோடி மதிப்புள்ள டிபென்டர் கார் ஒன்றை கேட்டுள்ளனர். அதை நாங்கள் புக் செய்து வைத்திருந்தோம். இந்த நிலையில் எனது மகளின் கணவர் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்துள்ளார்.

தற்போது, அந்தப் பெண்ணையும் என் மகள் இருக்கும் போதே வீட்டுக்கும் அழைத்து வந்து தங்க வைத்துள்ளார். இதுகுறித்து உன் தாயாரிடம் கூறினால் உன்னை கொலை செய்து விடுவேன் என என் மகளின் கணவர் மிரட்டி இருக்கிறார்.

இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 15-ம் தேதி எனது மகள் கடும் மன வேதனையுடன் கோயம்புத்தூரில் இருந்து நெல்லைக்கு எங்கள் வீட்டிற்கு வந்து விட்டார். ஆனால் மறுநாளே எங்கள் வீட்டுக்கு வந்த மகளின் கணவர் மற்றும் அவர் குடும்பத்தினர் உங்கள் மகளுடன் வாழ வேண்டும் என்றால் கூடுதல் வரதட்சணை தர வேண்டும். மேலும் இருட்டுக்கடை அல்வா உரிமத்தை மகளின் கணவர் பெயரில் எழுதித்தர வேண்டும் என மிரட்டினர்.

எனது மகளின் மாமனார் பாரதிய ஜனதா கட்சியின் செல்வாக்கு மிக்க நபருடன் தொடர்பில் இருப்பதாகவும் எங்குச் சென்று புகார் அளித்தாலும் அதனை ஒன்றும் இல்லாமல் ஆக்கி விடுவேன். பொய்யை உண்மையாகவும் உண்மையை பொய்யாகவும் எனக்கு தெரியும் என மிரட்டுகிறார். இந்த பிரச்னை குறித்து தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கும் மனு அளித்துள்ளோம் கருணையுடன் அவரும் எங்கள் பக்கம் உள்ள நியாயத்தை புரிந்து கொண்டு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று ஊடகங்கள் மூலம் வேண்டுகோள் விடுக்கிறேன் என உரிமையாளர் கவிதா ஹரி சிங் தெரிவித்தார்.

கவிதா ஹரிசிங் மகளான கனிஷ்கா கூறும்போது எனது கணவர் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருக்கிறார். இதுகுறித்து உன் வீட்டில் கூறினால் உன்னைக் கொலை செய்து விடுவேன் என என்னை மிரட்டினார். என்னிடம் உனது அம்மாவிடமிருந்து இருட்டுக்கடை அல்வா கடை உரிமத்தை என் பெயருக்கு மாற்றி எழுதி தர வேண்டும் என கேட்டார். என் கணவரும் அவரது குடும்பத்தாரும் என்னை மிகவும் கொடுமைபடுத்தினார்கள். நான் மிகவும் மன வேதனை அடைந்திருக்கிறேன். இது குறித்து மாநகர காவல் ஆணையரிடமும் புகார் அளித்திருக்கிறேன் எனத் தெரிவித்தார்.

உலகப் புகழ்பெற்ற இருட்டுக்கடை அல்வா சுவையில் மட்டுமல்ல விற்பனையிலும் முதலிடத்தில் இருக்கிறது. மிக பிரம்மாண்டமாக பல கோடிகள் செலவு செய்து மகளுக்கு திருமணம் முடித்த நிலையில் இன்று வரதட்சணையாக வருவாய்க்கு ஆதாரமான லாலா கடை உரிமத்தை வரதட்சணையாக கேட்கும் கொடுமையை எண்ணி மனவேதனை அடைந்துள்ளார் இருட்டுக்கடை உரிமையாளர் கவிதா ஹரிசிங் என்று கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என் சகோதரர் ராகுலின் கேள்விகளுக்கு பாஜக ஏன் அஞ்சுகிறது? - முதல்வர் ஸ்டாலின்

வாளையாறு அருகே ரயில் மோதி குட்டி யானை பலி: ஏஐ கண்காணிப்பை மீறி விபத்து!

லிபியா சர்வாதிகார அதிபர் கடாஃபியின் மகன் சுட்டுக்கொலை!

ஜொலிக்கும் தங்கம் விலை! இருளில் பொற்கொல்லர் வாழ்க்கை!!

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 5,040 உயர்வு.. வெள்ளியும் கிலோ ரூ. 20,000 உயர்ந்தது!

SCROLL FOR NEXT