தொழிற்துறைக்கான 5 அறிவிப்புகள்: முதல்வர் ஸ்டாலின்!
தொழிற்துறைக்கான 5 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்!
சென்னை குன்றத்தூரில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழகத்தில் தொழில்களையும் தொழில் முனைவோரையும் ஊக்குவிக்க 5 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்.
சென்னையை அடுத்த குன்றத்தூரில் இன்று கலைஞர் கைவினைத் திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், மத்திய அரசு கொண்டு வந்த விஸ்வகர்மா திட்டத்தை கடுமையாக எதிர்த்தோம். குலத் தொழிலை ஊக்குவிப்பதாக உள்ளது விஸ்வகர்மா திட்டம். குடும்ப குலத் தொழிலை ஊக்குவித்து வெளியுலகையே காணாமல் இருக்கச் செய்கிறது பாஜக. விஸ்வகர்மா திட்டத்தில் தமிழகம் குறிப்பிட்ட 3 மாற்றங்களை மத்திய அரசு நிராகரித்துவிட்டது. மத்திய அரசு கொண்டு வந்த விஸ்வகர்மா திட்டம் சமூக நீதிக்கு எதிரானது. அதில் இணைய குறைந்தபட்ச வயது 18. விஸ்வகர்மா திட்டத்துக்கு மாற்றாக தமிழக அரசு கொண்டுவந்திருப்பதுதான் கலைஞர் கைவினைத் திட்டம் என்று கூறினார்.
மேலும், பொன்னேரியில் நேற்று ஐந்து முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின், குன்றத்தூரில் இன்று தொழில்துறை சார்ந்த 5 அறிவிப்புகளை வெளியிட்டார்.
அது குறிது பேசிய அவர், தொழில்களை ஊக்குவிக்கவும், தொழில் முனைவோர்களுக்கு உதவுகின்ற வகையிலும், இந்த விழாவின் மூலமாக ஐந்து அறிவிப்புகளை வெளியிட விரும்புகிறேன் என்று அறிவித்தார்.
முதல் அறிவிப்பு
அறிவுசார் சொத்துரிமையான ‘புவிசார் குறியீடு’ பெறுவதற்காக வழங்கப்பட்டு வரும் மானியம் 25 ஆயிரம் ரூபாயில் இருந்து ஒரு இலட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.
இரண்டாவது அறிவிப்பு
அம்பத்தூர் தொழிற்பேட்டையில் செயல்படும் வாகன மற்றும் பொறியியல் உதிரி பாகங்கள் தயாரிக்கின்ற தொழில் நிறுவனங்களுக்கு தேவையான அளவியல் மற்றும் உலோகவியல் ஆய்வகங்கள் ஐந்து கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.
மூன்றாவது அறிவிப்பு
தொழில் நிறுவனங்கள் மிகுதியாக இருக்கின்ற காஞ்சிபுரம், பழந்தண்டலத்தில் சாலை கட்டமைப்பு மற்றும் மழைநீர் வடிகால் அமைக்க ஐந்து கோடி ரூபாய் செலவில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.
நான்காவது அறிவிப்பு
காக்களூர் உற்பத்தியாளர்கள் தொழிற்பேட்டையில், தொழில்நுட்ப திறன் மேம்பாட்டுக்கான பயிற்சி மையம் மற்றும் இயந்திர தளவாடங்கள் கூடிய பொது வசதி மையம் மூன்று கோடியே 90 இலட்சம் ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும்.
ஐந்தாவது அறிவிப்பு
குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்கள், உள்நாட்டில் வர்த்தக கண்காட்சிகள் மற்றும் நிகழ்வுகளில் பங்கேற்க வழங்கப்படக்கூடிய காட்சிக்கூட கட்டணத்துக்கான நிதியுதவி, ஒரு இலட்சம் ரூபாயில் இருந்து இரண்டு இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
அரசு சார்பில், நாங்கள் வழங்குவது இந்த சிறு உதவி மட்டும்தான். அது மூலமாக உரம்பெற்று - உயர்ந்து - வளர்ந்து - நீங்களும் வாழ்ந்து - மற்றவர்களையும் வாழ வைக்க வேண்டிய கடமை உங்கள் கையில்தான் இருக்கிறது.
“தெய்வத்தான் ஆகாது எனினும்; முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்” என்கிறார் வள்ளுவர். ‘முயற்சி திருவினை ஆக்கும்’ என்பதை அனைவரும் உணர்ந்து உழைப்பைச் செலுத்துங்கள்!
உங்கள் தொழிலில் புதிய டெக்னாலஜியை பயன்படுத்திக் கொள்ளுங்கள். தொழிலை விரிவு செய்யுங்கள். உங்களையும், உங்கள் குடும்பத்தையும், உங்கள் பகுதியையும் வளப்படுத்துங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று கூறினார்.