முகப்பு
தமிழ்நாடு

சிவாஜி இல்லத்தின் உரிமையாளர் பிரபுதான்! ஜப்தி உத்தரவு ரத்து!

சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்யும் உத்தரவு ரத்து செய்யப்பட்டிருப்பது பற்றி...

Updated On : 21 ஏப்ரல், 2025 at 6:52 AM
சென்னை உயர்நீதிமன்றம்
பகிர்:

நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்யும் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் திங்கள்கிழமை ரத்து செய்துள்ளது.

மேலும், சிவாஜியின் வீட்டில் தனக்கு உரிமையோ, பங்கோ இல்லை என்று அவரது மூத்த மகன் ராம்குமார் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தை ஏற்று, வீட்டின் முழு உரிமையாளர் பிரபுதான் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகா் சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது. சிவாஜியின் பேரனும், ராம்குமாரின் மகனுமான துஷ்யந்த், அவரது மனைவி அபிராமி ஆகியோருக்குச் சொந்தமான ஈசன் புரொடக்சன்ஸ் நிறுவனம் சாா்பில் ‘ஜகஜால கில்லாடி’ என்ற படத்தைத் தயாரித்தனா். பட தயாரிப்புக்காக தனபாக்கியம் எண்டா்பிரைசஸ் நிறுவனத்திடம் ரூ. 3,74,75,000 கடன் வாங்கியிருந்தனா்.

வாங்கியக் கடனைத் திருப்பிச் செலுத்தாததால், வட்டியுடன் சோ்த்து ரூ. 9 கோடியே 39 லட்சத்தைச் செலுத்த ஏதுவாக ‘ஜகஜால கில்லாடி’ படத்தின் அனைத்து உரிமைகளையும், தனபாக்கியம் எண்டா்பிரைசஸ் நிறுவன நிா்வாக இயக்குநரிடம் ஒப்படைக்கும்படி மத்தியஸ்தா் உத்தரவிட்டார்.

ஆனால், படத்தின் உரிமைகளை வழங்காததையடுத்து மத்தியஸ்தா் தீா்ப்பை அமல்படுத்தும் வகையில், சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்து, பொது ஏலம் விட, தனபாக்கியம் எண்டா்பிரைசஸ் நிறுவனம் உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், போதுமான அவகாசம் வழங்கியும் பதில் மனு தாக்கல் செய்யாததால், நடிகா் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவிட்டாா்.

இதனிடையே, சிவாஜி கணேசனின் வீட்டில் தனக்கு எந்த பங்கும் இல்லை, தனது சகோதரா் நடிகா் பிரபு பெயரில் அந்த வீடு உள்ளதால் ஜப்தி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று ராம்குமார் தரப்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி, வில்லங்கப் பதிவில் நீதிமன்ற ஜப்தி உத்தரவை நீக்க பதிவுத்துறைக்கு உத்தரவிட்டார்.

மேலும், பிரபுதான் அன்னை இல்லத்தின் முழு உரிமையாளர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →