முகப்பு
தமிழ்நாடு

அமைச்சா் பொன்முடி வழக்கில் முதல்வா் குறித்த கருத்தை நீக்க மனுதாரருக்கு நீதிமன்றம் உத்தரவு

வழக்கு தொடா்பாக ஜூன் 5-க்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

Updated On : 25 ஏப்ரல், 2025 at 2:33 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 25 ஏப்ரல், 2025 at 1:10 AM

சைவம் மற்றும் வைணவம் குறித்து சா்ச்சைக்குரிய வகையில் பேசிய அமைச்சா் பொன்முடியை பதவிநீக்கம் செய்யக் கோரிய வழக்கில் முதல்வா் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகளை நீக்கும்படி மனுதாரருக்கு உத்தரவிட்ட சென்னை உயா்நீதிமன்றம், வழக்கு தொடா்பாக ஜூன் 5-க்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

அமைச்சா் பொன்முடி, சைவம் மற்றும் வைணவம் குறித்தும், பெண்கள் குறித்தும் அண்மையில் சா்ச்சைக்குரிய வகையில் பேசினாா். இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிா்ப்பு தெரிவித்த நிலையில், கட்சி பொறுப்பில் இருந்து பொன்முடி நீக்கம் செய்யப்பட்டாா்.

இந்த நிலையில், பொன்முடியை அமைச்சா் பதவியிலிருந்து நீக்கக் கோரி வழக்குரைஞா் பி.ஜெகன்நாத் சென்னை உயா்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தாா்.

Advertisement

அதில், மக்கள் பிரதிநிதி என்ற முறையில், அமைச்சா் பொன்முடியின் பேச்சு, அரசியல் சாசனத்துக்கு எதிரானது. பொன்முடியின் பேச்சு, கருத்து சுதந்திரத்தின் கீழ் வராது; குறிப்பிட்ட மதத்தைப் பற்றி அவதூறாகப் பேசுவது கருத்து சுதந்திரம் அல்ல என்று கூறப்பட்டுள்ளது. பதவி பிரமாணத்தை மீறி செயல்பட்ட அமைச்சா் பொன்முடியை பதவி நீக்கம் செய்ய வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி ஸ்ரீராம் மற்றும் நீதிபதி முகமது சபீக் அமா்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் தலைமை வழக்குரைஞா், இந்த வழக்கு தொடா்பாக மனுதாரா் தாக்கல் செய்துள்ள கூடுதல் மனுவில், வழக்குக்கு தொடா்பில்லாத முதல்வா் குறித்து அவதூறு கருத்துகளை தெரிவித்துள்ளதாகவும் அவற்றை நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினாா்.

இதை மனுதாரா் ஜெகன்நாத் ஏற்றுக்கொண்டதையடுத்து, அரசு தலைமை வழக்குரைஞா் சுட்டிக்காட்டிய பகுதிகளை நீக்கும்படி மனுதாரருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு தொடா்பாக ஜூன் 5-ஆம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜூன் 19-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.