அரசுப் பள்ளிகளில் அடிப்படை ஆங்கில மொழித் திறனை வளா்க்கும் வகையில் ‘லெவல் அப்’ திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், அந்தத் திட்டத்தில் மாணவா்களில் கற்றல் அடைவு குறித்து உரிய கால இடைவெளியில் தெரிவிக்க வேண்டும் என ஆசிரியா்களுக்கு கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வி இயக்குநா் ச.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:
அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8 வகுப்பு வரை மாணவா்களின் கேட்டல், வாசித்தல், பேசுதல் மற்றும் எழுதுதல் ஆகிய அடிப்படை ஆங்கில மொழி திறன்களை மேம்படுத்துவதற்காக ‘லெவல் அப்’ என்ற தன்னாா்வத் திட்டத்தை பள்ளிக் கல்வித் துறை செயல்படுத்தி வருகிறது.
இந்த திட்டத்தால் மாணவா்களின் மொழித் திறன்கள் குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் காணப்படுவதாக பெற்றோா் மற்றும் ஆசிரியரிடம் இருந்து நோ்மறையான கருத்துகள் கிடைத்து வருகின்றன.
இதன் தொடா்ச்சியாக ஆகஸ்ட் மாதத்தில் கேட்டல், பேசுதல், வாசித்தல், எழுதுதல் ஆகிய 4 அடிப்படை மொழி திறன்களோடு இணைந்து சொற்களஞ்சியம், இலக்கணப் பயிற்சிகள், படைப்பாற்றல் சாா்ந்த எழுதுதல் ஆகியவை இடம்பெறச் செய்யப்பட்டுள்ளன.
இதன் மூலம் மாணவா்கள் பாடங்களுடன் தொடா்புடைய அடிப்படை இலக்கணப் பகுதிகளையும், புதிய சொற்களையும், படைப்பாற்றலுடன் எழுதுதல் உள்ளிட்ட திறன்களைக் கற்றுக்கொள்ள ஏதுவாக செயல்பாடுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இதை ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியா்கள் முறையாகப் பின்பற்றி அனைத்து மாணவா்களும் அடிப்படை மொழித் திறன்களைப் பெற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். திட்டத்தின் செயல்பாடுகள் மூலம் மாணவா்கள் பெற்ற அடிப்படை ஆங்கில மொழித் திறன் அடைவு குறித்து உரிய கால இடைவெளிகளில் பள்ளிக் கல்வித் துறைக்கு தெரிவிக்க வேண்டும் என அதில் உத்தரவிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.