சேலம் மாவட்டம் மேட்டூரில் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு மக்கள் புனித நீராட குவிந்தனர்.
சேலம் மாவட்டம் மேட்டூரில் ஆடிப்பெருக்கு விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அணையின் மட்டம் பகுதியில் மக்கள் காவிரி ஆற்றில் தலையில் அருகம்புல், நாணயம் வைத்து காவிரியில் மூழ்கி புனித நீராடினர். புதுமணத் தம்பதிகள் திருமணத்தின்போது அணிந்த மாலையை காவிரியில் விட்டு புனித நீராடி காவிரி அன்னையை வழிபட்டனர். அணை முனியப்பனுக்கு பொங்கலிட்டு ஆடு, சேவல் பலியிட்டு நேர்த்தி கடன் செலுத்தினர். பின்னர் சமைத்த உணவை சாப்பிடவும் அணை பூங்காவை சுற்றிப் பார்த்தனர்.
பலர் தங்களது பகுதியில் கோயில்களில் வைத்து வழிபட்ட சாமி சிலைகள், மணி, தட்டு, கத்தி உள்ளிட்ட பூஜை பொருள்களை காவிரி கரையில் வைத்து சுத்தம் செய்து சிறப்பு பூஜைகள் செய்தனர். மேலும் காவிரி கரையில் அமர்ந்து வேத விற்பனங்கள் மந்திரங்கள் ஓதி முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்
பாதுகாப்பு பணிக்காக மேட்டூர் வருவாய் கோட்டாட்சியர் சுகுமார், மேட்டூர் காவல் துணை கண்காணிப்பாளர் ஆரோக்கியராஜ் தலைமையில் 400க்கும் மேற்பட்ட போலீசார், ஊர்க்காவல் படையினர், என்எஸ்எஸ் மாணவர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தீயணைப்புத்துறையினர் ரப்பர் படகுகளுடன் தயார் நிலையில் காவிரி ஆற்றில் உள்ளனர். காவிரி ஆற்றில் நீராட வரும் பெண்களுக்கு உடை மாற்றும் அறை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் கொளத்தூர் மேச்சேரி பகுதிகளில் 13 இடங்களில் மட்டுமே நீராட மக்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போலீஸ் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு கடைகள் போடப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.