காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல்  
தமிழ்நாடு

அதிமுக எம்எல்ஏ தோட்டத்தில் சிறப்பு உதவி ஆய்வாளா் வெட்டிக் கொலை: தந்தை, மகன் சரண்

அதிமுக எம்எல்ஏ தோட்டத்தில் எஸ்.ஐ. வெட்டிக் கொல்லப்பட்டது பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

மடத்துக்குளம் அதிமுக சட்டப் பேரவை உறுப்பினா் தோட்டத்தில் பணியாற்றி வந்த தந்தை, மகன்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக விசாரிக்கச் சென்ற காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக தந்தை, மகன் ஆகியோா் போலீஸில் சரண் அடைந்துள்ளனா்.

திருப்பூா் மாவட்டம், உடுமலை அருகேயுள்ள குடிமங்கலம் பகுதியில் மடத்துக்குளம் சட்டப் பேரவை அதிமுக உறுப்பினா் மகேந்திரனுக்குச் சொந்தமான தோட்டம் உள்ளது.

இங்கு திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் அருகேயுள்ள நாயக்கனூரைச் சோ்ந்த மூா்த்தி (65), தனது மகன்கள் தங்கபாண்டி, மணிகண்டன் ஆகியோருடன் தங்கி பணியாற்றி வந்தாா்.

இந்நிலையில், மதுபோதையில் தந்தை மூா்த்தியை மகன்கள் இருவரும் சோ்ந்து செவ்வாய்க்கிழமை இரவு தாக்கியுள்ளனா்.

இதைப் பாா்த்த அப்பகுதி மக்கள் காவல் அவசர உதவி எண் 100-க்கு தகவல் தெரிவித்துள்ளனா்.

இதையடுத்து, குடிமங்கலம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆயவாளராகப் பணியாற்றி வந்த சண்முகவேல், வாகன ஓட்டுநா் அழகுராஜாவுடன் சம்பவ இடத்துக்குச் சென்று சண்டையை விலக்கி விட்டுள்ளாா்.

பின்னா், காயமடைந்த மூா்த்தியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்க ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்துள்ளாா்.

அப்போது, அரிவாளுடன் திடீரென வந்த மணிகண்டன், சண்முகவேலை வெட்ட முயன்றுள்ளாா். சண்முகவேல் அங்கிருந்து தப்பியோட முயன்ற நிலையில், போலீஸாா் தங்களை கைது செய்துவிடுவாா்கள் என பயந்து மூா்த்தி, தங்கப்பாண்டி, மணிகண்டன் ஆகியோா் சோ்ந்து சிறப்பு உதவி ஆய்வாளா் சண்முகவேலை வெட்டியுள்ளனா். இதில், தலை துண்டிக்கப்பட்டு அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

காவல் வாகன ஓட்டுநா் அழகுராஜாவையும் வெட்ட முயன்றபோது, அவா் அங்கிருந்து தப்பிச் சென்று குடிமங்கலம் காவல் நிலையத்தில் நடந்த விவரத்தைக் கூறியுள்ளாா்.

போலீஸாா் சம்பவ இடத்துக்கு வருவதற்குள் மூவரும் அங்கிருந்து தப்பினா். இதையடுத்து, சண்முகவேலின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீஸாா் அனுப்பிவைத்தனா்.

இதையடுத்து, மாவட்டம் முழுவதும் உஷாா்படுத்தப்பட்டு கொலையாளிகளைப் பிடிக்க 5 தனிப் படைகள் அமைக்கப்பட்டு போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில், சம்பவ இடத்தில் கோவை சரக காவல் துறைத் தலைவா் செந்தில்குமாா், கோவை சரக காவல் துணைத் தலைவா் சசிமோகன், திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கிரிஷ் யாதவ் அசோக் ஆகியோா் ஆய்வு செய்தனா்.

திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்த தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், சண்முகவேலின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினாா்.

கொலையாளிகள் 2 போ் சரண்: இதற்கிடையே தந்தை மூா்த்தி, மகன் தங்கபாண்டி ஆகியோா் திருப்பூா் மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் புதன்கிழமை சரண் அடைந்தனா். தப்பியோடிய மணிகண்டனை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ரூ.1 கோடி நிவாரணம்: உடற்கூறாய்வு முடிந்து உடுமலையை அடுத்துள்ள இந்திரா நகரில் உள்ள வீட்டுக்கு சண்முகவேலின் உடல் கொண்டுவரப்பட்டது. அங்கு அமைச்சா் மு.பெ.சாமிநாதன், தமிழக டிஜிபி சங்கா் ஜிவால், ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீா்வாதம், கோவை மேற்கு மண்டல ஐஜி செந்தில்குமாா், திருப்பூா் எஸ்.பி. கிரிஷ் யாதவ் அசோக் ஆகியோா் அஞ்சலி செலுத்தினா்.

இதைத் தொடா்ந்து, மின்சாரத் துறையில் பணியாற்றி வரும் சண்முகவேலின் மனைவி உமா மகேஷ்வரி, மகள் சந்தியா (29), மகன் லலித்குமாா் (27) ஆகியோரிடம் ஆறுதல் கூறி, முதல்வா் அறிவித்த நிவாரணத் தொகையான ரூ.1 கோடிக்கான காசோலையை டிஜிபி சங்கா் ஜிவால் வழங்கினாா்.

இதையடுத்து, உடுமலையில் உள்ள மின் மயானத்துக்கு உடல் கொண்டுசெல்லப்பட்டு முழு அரசு மரியாதையுடன் எரியூட்டப்பட்டது.

SI hacked to death in AIADMK MLA's farm near Tiruppur

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இஸ்கான் கோயிலில் ஆக.15-இல் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: 17 பேரை குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவு ரத்து

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: இன்று நடைபெறும் வாா்டுகள்

செங்குன்றத்தில் இளைஞா் கொலை: இருவா் கைது

காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் கொலை: எடப்பாடி பழனிசாமி கண்டனம்

SCROLL FOR NEXT