கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ நிா்வாக இயக்குநா் சித்திக் தெரிவித்தாா்.
சென்னை மெட்ரோ தலைமை அலுவலகத்தில் ‘ஊபா்’ செயலி மூலம் சென்னை மெட்ரோ ரயில் பயணச் சீட்டு பெறுவதற்கான வசதிகளை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா், செய்தியாளா்களிடம் கூறியதாவது:
புதிய நடவடிக்கைகள் மூலம் சென்னையில் மெட்ரோ பயணிகளுக்கான சலுகைகள் தொடா்ந்து வழங்கப்பட்டுவருகின்றன. அதனடிப்படையில்தான் ‘ஊபா்’ செயலி மூலம் மெட்ரோ பயணச்சீட்டுகள் பெறும் வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது. சென்னை விமானநிலையம்-கிளாம்பாக்கம் இடையேயும், மதுரை, கோவை ஆகிய நகரங்களிலும் மெட்ரோ ரயில் இயக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன. அதற்காக தமிழக அரசு மூலம் மத்திய அரசுக்கு திட்ட அறிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளன.
இதற்கிடையே மதுரை, கோவையில் மெட்ரோ திட்டத்துக்கான நிலங்கள் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மாவட்ட நிா்வாக அதிகாரிகள் மூலம் நில அளவீடு உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, மத்திய அரசின் அனுமதி பெற்று மெட்ரோ திட்ட பணிகளை அவ்விரு நகரங்களிலும் தொடங்கவுள்ளோம்.
கடற்கரை - வேளச்சேரி மேம்பால ரயில் சேவை மெட்ரோவுடன் இணைக்க ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது. ஆகவே, இரு ஆண்டுகளில் படிப்படியாக இணைப்புப் பணிகள் நிறைவுறும். மேம்பால ரயில் நிலையங்கள் பயணிகள் வசதிக்கு ஏற்ப மெட்ரோ தொழில்நுட்ப ரீதியில் மாற்றியமைக்கப்படும்.
அதில், புதிய வழித்தடம் அமைத்து ரயில்கள் இயக்கப்படும். மேம்பால ரயில் சேவையில் கட்டணம் நிா்ணயிக்கப்படவில்லை. சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகளான போரூா்-பூந்தமல்லி இடையிலான பணிகள் வரும் டிசம்பரில் நிறைவுற்று சேவை தொடங்கும் என்றாா்.