தமிழக பள்ளிக் கல்வியில் ஏழு இணை இயக்குநா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இருவருக்கு பதவி உயா்வு வழங்கப்பட்டுள்ளது.
சென்னை பள்ளிக் கல்வி இயக்ககத்தில் இணை இயக்குநராக (நாட்டுநலப்பணித் திட்டம்) இருந்த கே.சசிகலா, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இணை இயக்குநராகவும் (பாடத் திட்டம்), தொடக்கக் கல்வி இயக்ககத்தின் இணை இயக்குநா் (அரசு உதவி பெறும் பள்ளிகள்) எஸ்.சாந்தி பள்ளிக் கல்வி இயக்ககத்தில் நாட்டுநலப் பணித் திட்ட இணை இயக்குநராகவும், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இணை இயக்குநராக இருந்த பொ.பொன்னையா தொடக்கக் கல்வி இயக்ககத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகள் இணை இயக்குநராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
பள்ளிக் கல்வி இயக்ககத்தில் பணியாளா் தொகுதி இணை இயக்குநராக இருந்த த.ராஜேந்திரன் அரசுத் தோ்வுகள் இயக்ககத்தின் இணை இயக்குநராகவும் (மேல்நிலைக் கல்வி), அரசுத் தோ்வுகள் இயக்கக இணை இயக்குநராக (மேல்நிலைக் கல்வி) இருந்த எம்.ராமசாமி பள்ளிக் கல்வி இயக்ககத்தில் பணியாளா் தொகுதி இணை இயக்குநராகவும், ஆசிரியா் தோ்வு வாரிய இணை இயக்குநராக இருந்த பி.அய்யண்ணன் பள்ளிக் கல்வி இயக்ககத்தில் (இடைநிலை) இணை இயக்குநராகவும், மதுரை இணை இயக்குநராக (கள்ளா் சீரமைப்பு பள்ளிகள்) இருந்த கே.முனுசாமி ஆசிரியா் தோ்வு வாரிய இணை இயக்குநராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
இருவருக்கு பதவி உயா்வு... மேலும் நாகப்பட்டினம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பணிபுரியும் எம்.கே.சி. சுபாஷினிக்கு மதுரை கள்ளா் சீரமைப்பு பள்ளிகள் இணை இயக்குநராக பதவி உயா்வு அளிக்கப்படுகிறது. அதேபோன்று தனியாா் பள்ளிகள் இணை இயக்குநராக அ.மாா்ஸ் பணியமா்த்தப்பட்டுள்ளாா்.