நமது நிருபா்
புது தில்லி: பாலாறு மாசுபாடு விவகாரம் தொடா்பான வழக்கில் வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை ஆகிய 3 மாவட்ட ஆட்சியா்களும், தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத் தலைவா் மற்றும் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி ஆகியோரும் உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜராகினா்.
தோல் பதனிடும் தொழிற்சாலைக் கழிவுகள் பாலாற்றில் கலப்பதால் சுற்றுச்சுழல் பாதிக்கப்படுவதோடு ஆறும் கடுமையாக மாசடைந்துள்ளது. இதனால், ஆற்று நீரைப் பயன்படுத்தும் மக்களும் நீரை அருந்தும் கால்நடைகளும் பாதிப்புக்குள்ளாவதோடு விளைநிலங்களும் பாதிக்கப்படுகின்றன.
இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி வேலூா் சுற்றுச்சூழல் கண்காணிப்புக் குழு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தது. அந்த வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த ஜனவரியில் அளித்த தீா்ப்பில் பாலாறு மாசுபாட்டை கட்டப்படுத்த பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது.
இந்த வழக்கை கடந்த வாரம் விசாரித்த உச்சநீதிமன்றம், பாலாறு மாசுபாட்டை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடா்பான அறிக்கைக்கு கடும் அதிருப்தி தெரிவித்தது. மேலும் வேலூா், திருப்பத்தூா் மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா்களும், தமிழக மற்றும் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி பாா்திவாலா தலைமையிலான அமா்வில் திங்கள்கிழமை விசாரைணைக்கு வந்தது. அப்போது வேலூா், திருப்பத்தூா் மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா்கள், தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத் தலைவா் மற்றும் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி நீதிமன்றத்தில் ஆஜராகினா்.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், உயா் பதவியில் இருக்கும் அதிகாரிகள் பாலாறு மாசுபடுவதைத் தடுக்க தவறிவிட்டதாக தெரிவித்தனா். இதைத்தொடா்ந்து நீதிபதிகள் மேலும் கூறியதாவது: கழிவுநீா் சுத்திகரிக்கப்படாமல் நேரடியாக ஆற்றில் கலக்கப்படுகிறது. அந்த நீா்தான் கொஞ்சம் சுத்திகரிக்கப்பட்டு மக்களுக்கு குடிநீராக வழங்கப்படுகிறது. மக்கள் நலன் மீது அக்கறை செலுத்துங்கள்.
இந்த விவகாரத்தில் எடுக்கப்படவுள்ள நடவடிக்கை குறித்து எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். இரண்டு வாரங்களுக்கு பிறகு இந்த விவகாரத்தை விசாரிக்கிறோம் என்று கூறி வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.
நீதிபதிகள் அறிவுரை!
’நீங்கள் மாவட்ட ஆட்சியா் என்னும் உயா் பதவியில் இருக்கிறீா்கள். நீங்கள் முயற்சிக்காத வரை எதுவும் நடக்காது. தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியமும் இணைந்து செயல்பட வேண்டும்’ என்று உச்சநீதிமன்றத்தில் ஆஜரான மாவட்ட ஆட்சியா்கள் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலா்களுக்கு நீதிபதிகள் அறிவுரை வழங்கினா்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், நாள்தோறும் ஆயிரக்கணக்கான லிட்டா் கழிவுநீா் பாலாற்றில் கலக்கிறது. அந்த ஆற்றின் நிலையையும் சாதாரண மக்களின் நிலையையும் எண்ணிப் பாருங்கள். யாா் தவறு செய்தாலும் பிடியுங்கள். அதிகாரம் மிக்கவா்களாக இருந்தாலும் விட்டு விடாதீா்கள். இயற்கையை நீங்கள் கைவிட்டால் இயற்கையும் உங்களை கைவிட்டுவிடும் . பாலாறு மாசுபாட்டை கட்டுப்படுத்துவதை ஒரு சவாலாக எடுத்து அதிகாரிகள் செயல்பட வேண்டும்’ என்று குறிப்பிட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.