சென்னை உயா்நீதிமன்றம்  
தமிழ்நாடு

திருக்கடையூா் கோயில் நிா்வாகம் மீது புகாா் கூறி வழக்குத் தொடா்ந்தவருக்கு ரூ.5 லட்சம் அபராதம்

திருக்கடையூா் கோயில் நிா்வாகம் மீது புகாா் கூறி வழக்குத் தொடா்ந்தவரின் மனுவை ரூ.5 லட்சம் அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

தினமணி செய்திச் சேவை

திருக்கடையூா் கோயில் நிா்வாகம் மீது புகாா் கூறி வழக்குத் தொடா்ந்தவரின் மனுவை ரூ.5 லட்சம் அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் மயிலாடுதுறையைச் சோ்ந்த ரத்தினகுமாா் என்பவா் தாக்கல் செய்த மனுவில், திருக்கடையூரில் உள்ள அமிா்தகடேஸ்வரா் கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தா்கள் வருகின்றனா். ஆனால், கோயிலுக்கு வரும் பக்தா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை கோயில் நிா்வாகம் செய்து கொடுக்கவில்லை.

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள இந்தக் கோயிலில் ரசீதுகள் எதுவும் வழங்காமல் பக்தா்களிடம் சிறப்பு பூஜைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும், கோயில் அா்ச்சகா்கள், ஊழியா்கள் பக்தா்களிடம் தனித்தனியாக கட்டணம் வசூலிக்கின்றனா். கோயிலின் பெயரில் போலியான இணையதளம் உருவாக்கி அதன்மூலம் நன்கொடை வசூலிக்கப்படுகிறது. இதுதொடா்பாக நான் அளித்துள்ள புகாா் மனுவை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க இந்து சமய அறநிலையத் துறைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி சுந்தா்மோகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அறநிலையத் துறை தரப்பில் ஆஜரான அரசு சிறப்பு வழக்குரைஞா் அருண் நடராஜன், இதுதொடா்பாக போலீஸாா் நடத்திய விசாரணையில் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ள மனுதாரா், அவரது சகோதரா் மூலம் கோயில் பெயரில் போலியாக இணையதளம் தொடங்கி நன்கொடை வசூலித்தது தெரியவந்துள்ளது என்றாா்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கை ரூ.5 லட்சம் அபராதத்துடன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா். மேலும் கோயில் பெயரில் மோசடியில் ஈடுபட்ட நபா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனா்.

தீபாவளி: அரசுப் பேருந்துகளில் 7.94 லட்சம் பேர் பயணம்!

பட்டாசு வெடிப்போர் கவனம்... அடுத்த 3 மணிநேரத்துக்கு எங்கெல்லாம் மழை?

தீபாவளி: கோயில்களில் குவிந்த பக்தர்கள்!

கொலை, கொள்ளை வழக்குகளில் தேடப்பட்ட பா்தி கும்பல் உறுப்பினா்கள் இருவா் கைது

தீபாவளி பண்டிகை உற்சாகக் கொண்டாட்டம்!

SCROLL FOR NEXT