தருமபுரியில் நடக்கும் அரசு விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின், ரூ.512.52 கோடி மதிப்பிலான 1,044 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இதனைத் தொடர்ந்து ரூ.362.77 கோடி மதிப்பில் 1,073 முடிவுற்ற திட்டங்களையும் தொடக்கி வைத்தார்.
சேலத்தில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் மாநில மாநாட்டில் பங்கேற்ற முதல்வர் மு.க. ஸ்டாலின், நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு சனிக்கிழமை இரவு தருமபுரி நகருக்கு வருகை தந்தார்.
ஞாயிற்றுக்கிழமை காலை தருமபுரி அதியமான் கோட்டை பகுதியில் நடைபெற்ற நிகழ்வுகளில் பங்கேற்றார். கூட்டுறவு துறை சார்பில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் விவசாய கடன்களை எளிதாக்கும் வகையில், இணைய வழியில் விண்ணப்பித்து, விண்ணப்பித்த அன்றே கடன் வழங்கும் திட்டத்தை, அதியமான் கோட்டை கூட்டுறவு தொடக்க வேளான் வங்கியில் தொடக்கி வைத்தார். தொடர்ந்து அங்கிருந்த இ சேவை மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, நல்லம்பள்ளி வட்டம், தடங்கம் ஊராட்சியில் அமைந்துள்ள பிஎம்பி கல்லூரி அருகில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்று, ரூ.512.52 கோடி மதிப்பில் 1,044 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.362.77 கோடியில் முடிவுற்ற 1,073 திட்டப் பணிகளை தொடக்கி வைத்தார்.
மேலும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, ஊரக வளர்ச்சி துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை, நகராட்சிகள் துறை, மகளிர் திட்டம், வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் ரூ. 830.06 கோடியில் 70,427 பேருக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி உரையாற்றினார்.
இவ்விழாவில் அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் எ.வ. வேலு, பெரிய கருப்பன், ராஜேந்திரன், எம்.பி. ஆ. மணி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பல்வேறு துறை அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதையும் படிக்க: சொல்லப் போனால்... நாய் படும் பாடு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.