குளித்தலையில் தனியார் பள்ளி தாளாளர் வீட்டில் திங்கள்கிழமை அதிகாலை வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள், அவர்களை கட்டிப்போட்டு விட்டு 40 சவரன் நகை மற்றும் ரூ. 7 லட்சம் பணம் மற்றும் 3 செல்ஃபோன் உள்ளிட்டவற்றைக் கொள்ளையடித்துவிட்டு காரில் தப்பிச் சென்ற அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
கரூர் மாவட்டம், குளித்தலை நகர் பகுதி காவேரி நகரைச் சேர்ந்தவர் கருணாநிதி (70). இவர் திருச்சி மாவட்டம் முசிறி அறிஞர் அண்ணா கலைக் கல்லூரியில் முதல்வராக இருந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி சாவித்திரி( 65).
இவர் குளித்தலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவர்களுக்கு ரம்யா, அபர்ணா மற்றும் ஒரு மகன் உள்ளனர். இவர்கள் மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் குளித்தலை காவேரி நகரில் உள்ள வீட்டில் பள்ளி தாளாளர் கருணாநிதி, அவரது மனைவி சாவித்திரி மற்றும் இளைய மகள் அபர்ணா ஆகிய 3 பேர் மட்டும் இருந்துள்ளனர்.
இதனிடையே, திங்கள்கிழமை அதிகாலை சுமார் 3 மணியளவில் காரில் வந்த 3 மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து கருணாநிதி, அவரது மனைவி சாவித்திரி, இளைய மகள் அபர்ணா ஆகியோரை கை, கால்களை கட்டிப்போட்டுவிட்டு, வீட்டில் இருந்த 40 சவரன் நகை, ரூ. 7 லட்சம் பணம் மற்றும் 3 செல்ஃபோன்கள் ஆகியவற்றை கொள்ளையடித்துவிட்டு காரில் தப்பிச் சென்றனர்.
கொள்ளையர்கள் ஒரு செல்ஃபோனை மட்டும் குளித்தலை - மணப்பாறை சாலையில் விட்டு சென்றுள்ளனர்.
கரூர் மாவட்ட கண்காணிப்பாளர் ஜோஸ் தங்கையா, குளித்தலை டிஎஸ்பி செந்தில்குமார் ஆகியோர் சம்பவம் நடந்த வீட்டிற்கு வந்து பார்வையிட்டனர்.
அதைத் தொடர்ந்து கரூரில் இருந்து தடயவியல் நிபுணர்கள் சம்பவ வீட்டிற்கு வந்து கைரேகை மற்றும் தடயங்களை சேகரித்தனர்.
அதைத் தொடர்ந்து மோப்ப நாய் லக்கி வரவழைக்கப்பட்டது. மோப்ப நாய் காவிரி நகரில் உள்ள வீட்டிற்குள் சென்றது. தொடர்ந்து, காவிரி நகர் புறவழிச்சாலையில் ஓடி, ரயில்வே கேட் தெற்கு பகுதி வரை சென்றது.
தனியார் பள்ளி தாளாளர் வீட்டில் அரங்கேறிய இந்த துணிகர கொள்ளைச் சம்பவம் குளித்தலை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.