முன்னாள் முதல்வர் மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசுவது அநாகரிகமான செயல் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
அதிமுக பிரசாரத்தில் ஆளில்லா ஆம்புலன்ஸ் அனுப்பி இடையூறு செய்வதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.
தன்னுடைய ஒவ்வொரு கூட்டத்திலும் ஆளில்லா ஆம்புலன்ஸை தொடர்ச்சியாக அனுப்பி, மக்களை சிரமத்துக்கு உள்ளாக்கும் வேலையை தமிழக அரசு செய்தாகவும் தெரிவித்தார்.
அடுத்த கூட்டத்தில் வேண்டுமென்று ஆள் இல்லாமல் ஆம்புலன்ஸ் வந்தால், ஓட்டி வரும் ஓட்டுநரே அதில் நோயாளியாக ஏற்றி அனுப்பப்படுவார் எனவும் எடப்பாடி பழனிசாமி எச்சரித்தார்.
இந்த நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், ”தமிழ்நாட்டில் 108 ஆம்புலன்ஸ் வாகனங்களின் எண்ணிக்கை 1,330. இந்த வாகனங்கள் உயிர் காக்கும் சேவையை செய்துக் கொண்டிருக்கிறன. எங்கு விபத்து ஏற்பட்டாலும் 8-10 நிமிடங்களுக்குள் சென்று, அந்த ஆம்புலன்ஸ் வாகனங்கள் உயிர் காக்கும் சேவையில் ஈடுபடுகின்றன.
தமிழ்நாட்டில் 108 ஆம்புலனஸ் சேவைபோல, உலகத்திலேயே வேறெங்கும் இதுபோன்று கிடையாது. ஆம்புலன்ஸ் வரும் வழியில் அதிமுக கூட்டத்தை நடத்திய எடப்பாடி பழனிசாமி, அவர் செல்லும் வழியில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் விடப்படுவதாக சொல்கிறார்.
அவருக்கு ஆம்புலன்ஸை பார்த்தால் வேறு ஏதோ நினைவு வருகிறதுபோல, ஒரு முன்னாள் முதல்வர், இப்படி மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசுவது அநாகரிகமான செயல். இப்படி பேசுவதை எடப்பாடி பழனிசாமி நிறுத்திக்கொள்ள வேண்டும். இப்படி பேசுவதால் அவருக்குதான் எதிர்ப்பு அதிகமாகும்” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.