மதுரை மாநாட்டில் அதிமுக குறித்த விஜய்யின் விமர்சனத்திற்கு அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார்.
மதுரை மாவட்டம் பாரபத்தியில், தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு வியாழக்கிழமை நடைபெற்றது. மாநாட்டில் பேசிய விஜய், பாசிச பாஜகவுடன் தமிழகத்தில் ஒரு கட்சி நேரடியாக கூட்டணி வைத்துள்ளது. பொருந்தா கூட்டணி என்பதால் மற்றொரு கட்சி மறைமுகமாக கூட்டணி வைத்துள்ளது.
மறைமுகக் கூட்டணிக்குச் செல்ல நாம் என்ன ஊழல் கட்சியா? என்றும் கேள்வி எழுப்பினார். மேலும் எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சி இப்போது எப்படி உள்ளது என்பதை வெளியில் சொல்ல முடியாமல் அப்பாவி அதிமுக தொண்டர்கள் வேதனையுடன் தவிக்கிறார்கள்.
2026 பேரவைத் தேர்தலில் யாருக்கு ஓட்டு போட வேண்டும், எப்படிபட்ட ஆட்சி அமைய வேண்டும் என்று அவர்களுக்கு நன்றாகத் தெரியும். இவ்வாறு குறிப்பிட்டார். அதிமுக குறித்த விஜய்யின் விமர்சனத்திற்கு அக்கட்சியின் பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார்.
காஞ்சிபுரத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது, அதிமுக இப்போது யார் கையில் இருக்கிறது என்று கேட்கிறார்கள். அறியாமையின் காரணமாக பேசுவதாக பார்க்கின்றேன். இதுகூட தெரியாமல் ஒரு கட்சிக்கு தலைவராக இருக்கின்றார் என்று சொன்னால் அவரை நம்பி எப்படி தொண்டர்கள் இருப்பார்கள்.
யாராலும் கட்சி தொடங்கியதுமே ஆட்சிக்கு வந்துவிட முடியாது. அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா என யாரும் எடுத்ததும் முதல்வர் ஆகிவிடவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.