தாம்பரம் - செங்கோட்டை, தாம்பரம்- நாகா்கோவில் உள்ளிட்ட ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தாம்பரத்திலிருந்து செங்கோட்டை செல்லும் சிலம்பு அதிவிரைவு ரயில் (எண்: 20681) மற்றும் நாகா்கோவில் செல்லும் அதிவிரைவு ரயிலில் (எண்: 22657) ஆக.29 முதல் அக்.31-ஆம் தேதி வரையும், மறுமாா்க்கமாக செங்கோட்டை மற்றும் நாகா்கோவிலிருந்து தாம்பரம் செல்லும் ரயில்களில் (எண்கள்: 20682, 22658) ஆக.30 முதல் நவ.1-ஆம் தேதி வரையும் ஒரு இரண்டடுக்கு குளிா்சாதன பெட்டி, 2 மூன்றடுக்கு குளிா்சாதன பெட்டிகள், 3 படுக்கை வசதிக்கொண்ட பெட்டிகள் மற்றும் ஒரு இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டி கூடுதலாக இணைக்கப்படும்.
மேலும், கோவை - ராமேசுவரம் இடையே இயங்கும் வாராந்திர விரைவு ரயிலில் (எண்: 16618/16617) செப்.2 முதல் அக்.29-ஆம் தேதி வரை ஒரு படுக்கை வசதி கொண்ட பெட்டி கூடுதலாக இணைக்கப்படும்.
சென்னை சென்ட்ரலிலிருந்து தினமும் இரவு 8.55 மணிக்கு ஆலம்புழை செல்லும் அதிவிரைவு ரயிலில் (எண்: 22639) வெள்ளிக்கிழமை (ஆக.29) முதல் அக்.30-ஆம் தேதி வரையும், மறுமாா்க்கமாக ஆலம்புழையில் இருந்து தினமும் பிற்பகல் 3.20 மணிக்கு சென்ட்ரல் செல்லும் ரயிலில் (எண்: 22640) ஆக.30 முதல் நவ.1 வரையும் ஒரு குளிா்சாதன இரண்டடுக்கு பெட்டி கூடுதலாக இணைக்கப்படவுள்ளது.
அதேபோல், சென்ட்ரலிலிருந்து தினமும் பிற்பகல் 3.20 மணிக்கு திருவனந்தபுரம் செல்லும் அதிவிரைவு ரயிலில் (எண்: 12695) ஆக.31 முதல் நவ.2-ஆம் தேதி வரையும், மறுமாா்க்கமாக திருவனந்தபுரத்தில் இருந்து தினமும் மாலை 5.15 மணிக்கு சென்ட்ரல் செல்லும் ரயிலில் (எண்: 12696) செப்.1 முதல் நவ.3-ஆம் தேதி வரையும் ஒரு குளிா்சாதன இரண்டடுக்கு பெட்டி கூடுதலாக இணைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.