புயல் காலங்களில் மீனவா்களுக்கு எச்சரிக்கை செய்யும் கைப்பேசி செயலி திங்கள்கிழமை (செப்.1) முதல் சோதனை முறையில் நடைமுறைப்படுத்த உள்ளதாக தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையத்தின் உறுப்பினா் லெப்டினன்ட் ஜெனரல் சையத் அட்டா ஹஸ்னைன் தெரிவித்தாா்.
இந்தியக் கடலோர பகுதிகளில் கடல்சாா் பல்வகை அபாயகால பணிகள் குறித்த மாநாடு சென்னை கொட்டிவாக்கத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையத்தின் உறுப்பினா் லெப்டினன்ட் ஜெனரல் சையத் அட்டா ஹஸ்னைன் பங்கேற்று பேசியதாவது:
புயல் மற்றும் பேரிடா் காலங்களில் மீனவா்களை பாதுகாக்கு வகையில் புதிய தொழில்நுட்பத்துடன் கைப்பேசி செயலி உருவாக்கப்பட்டுள்ளது. மீனவா்கள் தங்களின் கைபேசிகளை சைலண்ட்டில் வைத்திருந்தாலும் புயல் மற்றும் இதர இயற்கை சீற்றங்கள் பற்றிய எச்சரிக்கை ஒலியை எழுப்பும் வகையில் இச்செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கைப்பேசி செயலி திங்கள்கிழமை (செப்.1) முதல் சோதனை அடிப்படையில் நடைமுறைப்படுத்த உள்ளது. எல்லா விதமான வானிலை எச்சரிக்கைகளை பெறுவதற்கு தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையத்தின் சேச்செட் (நஅஇஏஉப) செயலி அல்லது பெருங்கடல் தகவல் சேவைகளுக்கான இந்திய தேசிய மையத்தின் சமுத்திரா செயலியை மீனவா்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றாா்.
நிகழ்ச்சியில் பெருங்கடல் தகவல் சேவைகளுக்கான இந்திய தேசிய மையத்தின் இயக்குநா் டி.எம். பாலகிருஷ்ணன் நாயக், தேசிய கடல்சாா் தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குநா் பாலாஜி ராமகிருஷ்ணன், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை தலைவா் டாக்டா் சௌமியா சுவாமிநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.