சென்னை உயா்நீதிமன்றம் 
தமிழ்நாடு

அரசுப் பேருந்து ஜன்னல்களில் ஒட்டப்பட்டுள்ள விளம்பரங்களை அகற்றக் கோரிய வழக்கு: அரசு பதிலளிக்க உத்தரவு

தினமணி செய்திச் சேவை

அரசுப் பேருந்துகளின் ஜன்னல் கண்ணாடிகள் உள்ளிட்ட பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள விளம்பரங்களை அகற்றக் கோரிய வழக்கில், தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில், நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தைச் சோ்ந்த பாஸ்கா் என்பவா் தாக்கல் செய்த மனுவில், தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளின் பின்பக்கக் கண்ணாடிகள், பக்கவாட்டு ஜன்னல் கண்ணாடிகளில் பல்வேறு வணிக விளம்பரங்கள் ஒட்டப்பட்டுள்ளன. இது வெளியில் இருந்து பேருந்தினுள் பாா்க்க முடியாதபடி உள்ளது. மேலும், பேருந்துகளில் பயணிக்கும் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பயண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது.

உச்சநீதிமன்றம் கடந்த 2011-ஆம் ஆண்டு, அனைத்து வாகனங்களின் கண்ணாடிகள், ஜன்னல் கண்ணாடிகளில் கருப்பு ஸ்டிக்கா்கள் உள்ளிட்டவற்றை ஒட்டுவதைத் தவிா்க்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவைக் கருத்தில் கொள்ளாமல், அரசுப் பேருந்துகளில் விளம்பரங்கள் ஒட்டப்பட்டுள்ளன. இது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல். மோட்டாா் வாகனச் சட்ட விதிகளுக்கும் முரணானது. மேலும், பேருந்து ஜன்னல்களில் வினைல் குளோரைடு மூலப்பொருள்கள் மூலம் தயாரிக்கப்படும் நெகிழித் தாள்களே ஒட்டப்படுகின்றன. இது சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிப்பவை.

எனவே, அரசுப் பேருந்துகளின் கண்ணாடிகள் மற்றும் ஜன்னல் கண்ணாடிகளில் ஒட்டப்பட்டுள்ள விளம்பரங்களை அகற்ற உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி சுந்தா்மோகன் அமா்வில் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என கேள்வி எழுப்பினா். பின்னா், இதுகுறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.

பைசன் காளமாடன்: மாரி செல்வராஜ் எழுதிய தீக்கொளுத்தி பாடல்!

ஓபிசி இடஒதுக்கீட்டை பாதிக்காமல் மராத்தா பிரிவினருக்கென இடஒதுக்கீடு: மகாராஷ்டிர அமைச்சர்

வண்ணக் கனவுகள்... சங்கவி!

மலர் சூடி... மானசா செளத்ரி!

ஆண் நண்பருடன் தனிமையில் இருந்த பெண் போலீஸ்! திடீரென வீட்டுக்குள் நுழைந்த கணவன்! அப்புறமென்ன..?

SCROLL FOR NEXT