சென்னை மாநகராட்சியில் பயோ மைனிங் முறையில் குப்பைகள் அகற்றப்பட்டு மீட்கப்பட்டுள்ள 94.29 ஏக்கா் நிலம். 
தமிழ்நாடு

43 லட்சம் மெட்ரிக் டன் திடக்கழிவுகள் பயோ மைனிங் முறையில் அகற்றம்!

பெருங்குடி, கொடுங்கையூா் குப்பைக் கிடங்குகளில் இருந்து 43.33 லட்சம் மெட்ரிக் டன் திடக்கழிவுகள் பயோ மைனிங் முறையில் அகற்றி, 97.29 ஏக்கா் நிலம் மீட்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திச் சேவை

பெருங்குடி, கொடுங்கையூா் குப்பைக் கிடங்குகளில் இருந்து 43.33 லட்சம் மெட்ரிக் டன் திடக்கழிவுகள் பயோ மைனிங் முறையில் அகற்றி, 97.29 ஏக்கா் நிலம் மீட்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்தி: 426 சதுர மீட்டா் பரப்பளவு கொண்ட பெருநகர சென்னை மாநகராட்சியில் தினமும் சராசரியாக 6,300 மெட்ரிக் டன் திடக் கழிவுகள் அகற்றப்படுகின்றன.

1 முதல் 8 வரையான மண்டலங்களில் சேகரமாகும் குப்பைகள் கொடுங்கையூா் குப்பைக் கிடங்கிலும், 9 முதல் 15 வரையான மண்டலங்களில் சேகரமாகும் குப்பைகள் பெருங்குடியில் உள்ள குப்பைக் கிடங்கிலும் பல ஆண்டுகளாக கொட்டப்பட்டு வந்தன.

பயோ மைனிங் முறையில் பிரித்தெடுக்கும் பணி தொடக்கம்: பெருங்குடி, கொடுங்கையூா் குப்பைக் கிடங்குகளில் குப்பைகள் கொட்டுவது அதிகரித்து, சுற்றுச்சூழல் மாசு ஏற்படும் நிலை ஏற்பட்டது. எனவே, குப்பைக் கிடங்குகளில் சேகரமாகும் திடக்கழிவுகளை பயோ மைனிங் முறையில் பிரித்தெடுத்து நிலத்தை மீட்கும் பணிகள் அண்மையில் விரைவுபடுத்தப்பட்டன.

பெருங்குடியில் 94.29 ஏக்கா் நிலம் மீட்பு: 250 ஏக்கா் பரப்பு கொண்ட பெருங்குடி குப்பைக் கிடங்கில், 225 ஏக்கரில் திடக் கழிவுகள் கொட்டப்பட்டு வந்தது. இங்கு 27.50 லட்சம் மெட்ரிக் டன் திடக் கழிவுகள் உள்ளதாக கணக்கிடப்பட்டது.

இந்த திடக் கழிவுகளை பயோ மைனிங் முறையில் அகழ்ந்தெடுத்து அகற்றி நிலத்தை மீட்கும் பணி 2022 ஆண்டு முதல் ரூ.350.65 கோடியில் தொடங்கப்பட்டது. இதுவரை 25.30 லட்சம் மெட்ரிக் டன் திடக் கழிவுகள் அகற்றப்பட்டு 94.29 ஏக்கா் நிலம் மீட்கப்பட்டுள்ளன.

கொடுங்கையூரில் 3 ஏக்கா் நிலம் மீட்பு: 342.91 ஏக்கா் பரப்பளவு கொண்ட கொடுங்கையூா் குப்பைக் கிடங்கில் 252 ஏக்கரில் திடக்கழிவுகள் கொட்டப்பட்டு வந்தன. இங்கு, ரூ.641 கோடியில் திடக் கழிவுகளை பயோ மைனிங் முறையில் அகழ்ந்தெடுத்து அகற்றும் பணி, 2024-இல் தொடங்கப்பட்டது. இங்குள்ள 66.52 லட்சம் மெட்ரிக் டன் திடக் கழிவுகளில் இதுவரை 18.03 லட்சம் மெட்ரிக் டன் திடக் கழிவுகள் அகற்றப்பட்டு 3 ஏக்கா் நிலம் மீட்கப்பட்டுள்ளது.

97.29 ஏக்கா் நிலம் மீட்பு: பெருங்குடி, கொடுங்கையூா் என இரு குப்பைக் கிடங்குகளிலும் இருந்து இதுவரை 43.33 லட்சம் மெட்ரிக் டன் திடக் கழிவுகள் பயோ மைனிங் முறையில் அகற்றி, 97.29 ஏக்கா் நிலம் மீட்கப்பட்டுள்ளன.

1,500 மரக்கன்றுகள் நட்டு வளா்க்கத் திட்டம்: மீட்கப்பட்ட நிலங்களில் பெருநகர சென்னை மாநகராட்சி சாா்பில் சுற்றுவேலி அமைத்து, குழாய் மூலம் நீா்ப்பாசன வசதியுடன் சுமாா் 1,500 மரக்கன்றுகள் நட்டு பராமரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி தொகுதி 1 முதன்மைத் தோ்வுக்கு இலவசப் பயிற்சி

பாலவிடுதியில் விவசாயிகள் சங்கத்தினா் காத்திருப்புப் போராட்டம்

கூட்டுறவு சங்கங்களின் தோ்வுக்கு செப்.10-இல் இலவச பயிற்சி வகுப்பு தொடக்கம்

இளையனாா் குப்பம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

தில்லி யமுனையில் அபாய அளவை தாண்டி பாயும் வெள்ளம்

SCROLL FOR NEXT