வடகிழக்கு பருவமழை மற்றும் வெள்ள பாதிப்புகளை கணக்கெடுத்து விரைவில் இழப்பீடு வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், டிட்வா புயலால் டெல்டா மாவட்டங்களில் பெய்த கனமழையால் வேளாண் நிலங்கள் நீரில் மூழ்கி, விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்த நிலையில், டிட்வா புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய நிவாரண நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அப்போது டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த முதல்வர், நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட்டார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் முதல்வர் தெரிவித்திருப்பதாவது:
”டிட்வா புயல் தொடர் மழையினால் கூடுதல் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் டெல்டா உழவர்களைக் காப்போம்.
அக்டோபர் தொடங்கி, தற்போது வரையிலான வடகிழக்கு பருவ கனமழையினால் சேதமடைந்துள்ள நெற்பயிர்கள் உள்ளிட்ட வேளாண் பயிர்கள் மற்றும் வீடுகள், மனித உயிரிழப்புகள், கால்நடை பலி ஆகியவற்றுக்கு உடனடியாக மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளேன்.
வெள்ளப் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் அனைத்து இடங்களிலும் நீரை வடிய வைக்கும் பணிகளைத் தொடர்ந்து நேரடியாகக் கண்காணித்து வருகிறேன்.
முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகளையும் தேவைப்படும் காலம் வரை நமது அரசு வழங்கும், மக்களைக் காக்கும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.