தமிழ்நாடு

மின்வேலியில் சிக்கி தந்தை, இரு மகன்கள் உயிரிழப்பு; மற்றொரு மகன் பலத்த காயம், குத்தகைதாரர் கைது

ஒடுகத்தூர் அருகே வனவிலங்குகளால் பயிர்கள் சேதமடைவதை தடுக்க விளை நிலத்தை சுற்றி வைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி தந்தை, இரு மகன்கள் என 3 பேர் உயிரிழந்தனர்.

தினமணி செய்திச் சேவை

ஒடுகத்தூர் அருகே வனவிலங்குகளால் பயிர்கள் சேதமடைவதை தடுக்க விளை நிலத்தை சுற்றி வைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி தந்தை, இரு மகன்கள் என 3 பேர் உயிரிழந்தனர். மற்றொரு மகன் பலத்த காயமடைந்தார். இச்சம்பவம் தொடர்பாக நிலத்தின் குத்தகைதாரர் கைது செய்யப்பட்டார்.

வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அருகிலுள்ள ராமநாயினிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஜானகிராமன்(55). இவரது மனைவி மல்லிகா(50). இவர்களது மகன்கள் விகாஷ் (25), லோகேஷ்(23), ஜீவா(22).

இதில், விகாஷ், ஜீவா ஆகியோர் தந்தைக்கு உதவியாக விவசாயப் பணியில் ஈடுபட்டு வந்ததுடன், சொந்த ஊரிலேயே நாற்றுப்பண்ணையும் நடத்தி வருகின்றனர்.

மேலும், மூத்த மகன் விகாஷிற்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி மனைவி, ஒரு குழந்தை உள்ளனர். 2-ஆவது மகன் லோகேஷ் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். லோகேஷ் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்தார்.

இந்நிலையில், ஜானகிராமன் தனது 3 மகன்களுடன் திங்கள்கிழமை இரவு தங்களது விவசாய நிலத்துக்கு சென்றபோது, பக்கத்திலுள்ள விளை நிலத்தை சுற்றி வனவிலங்குகளால் பயிர்கள் சேதமடைவதை தடுக்க வைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி ஜானகிராமன் அலறியுள்ளார். இதைப்பார்த்த 3 மகன்களும் தந்தையை காப்பாற்ற முயன்றதில் அவர்கள் மீதும் மின்சாரம் பாய்ந்துள்ளது. சிறிதுநேரத்தில் ஜானகிராமன், விகாஷ், ஜீவா ஆகிய 3 பேர் மீதும் மின்சாரம் பாய்ந்து உடல்கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். லோகேஷ் பலத்த காயமடைந்தார்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த வேப்பங்குப்பம் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்து மின்சாரத்தை துண்டித்தனர். பின்னர், காயமடைந்த லோகேஷை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த ஜானகிராமன், விகாஷ், ஜீவா உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

மேலும், இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து மின்வேலி அமைத்திருந்த அதே பகுதியைச் சேர்ந்த சங்கர்(52) என்பவரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். விசாரணையில், சங்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார்.

வனவிலங்குகளால் பயிர்கள் சேதமடைவதை தடுக்க விளை நிலத்தை சுற்றி சட்டவிரோதமாக மின்வேலி அமைத்திருந்தது தெரியவந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயிலில் தவறவிட்ட நகைப் பையை மீட்டு ஒப்படைத்த ரயில்வே போலீஸாா்!

தாயாா் கண்டித்ததால் இளம்பெண் தற்கொலை

சாமல்பட்டி ரயில்வே தரைப்பாலத்தில் அரசுப் பேருந்துகள் நேருக்குநோ் மோதல்: ஓட்டுநா் உள்பட 11 போ் காயம்

காா்த்திகை தீபத் திருவிழா: திருவண்ணாமலைக்கு செல்லும் கனரக வாகனங்களை மாற்றுப் பாதையில் இயக்க அறிவுறுத்தல்

பா்கூா் அருகே 101 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

SCROLL FOR NEXT