கோப்புப்படம்.  
தமிழ்நாடு

126 கிராமங்களில் அறிவுசார் மையங்கள்!

தமிழகம் முழுவதும் 126 கிராமங்களில் அறிவுசார் மையங்கள் அமைக்கப்படவுள்ளன.

தினமணி செய்திச் சேவை

ஆர். முருகன்

திருச்சி: ஆதிதிராவிடர், பழங்குடியினத்தைச் சேர்ந்த கிராமப்புற மக்கள் கல்வியறிவு பெறவும், மாணவர்கள், விவசாயிகள், மகளிர் சுய உதவிக் குழுக்கள் பயன்பெறும் வகையிலும் தமிழகம் முழுவதும் 126 கிராமங்களில் அறிவுசார் மையங்கள் அமைக்கப்படவுள்ளன. இதற்கான அரசாணையை தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை வெளியிட்டுள்ளது.

கிராமப்புற ஆதிதிராவிட, பழங்குடியினருக்கு அரசின் நலத்திட்டங்களை அறிவித்தல், கல்வி மற்றும் இதர பயனுள்ள தகவல்களை வழங்குதல், விவசாயிகள், மாணவர்கள், சுய உதவிக் குழுக்களுக்கு பயிற்சி அளித்தல் என்ற அடிப்படையில் இந்த மையங்கள் செயல்படவுள்ளன. இதற்காக தமிழகத்தில் 126 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

கிராம அறிவுசார் மையங்கள் என்ற பெயரில் இதற்கான கட்டடங்கள் மூன்று "மாதிரிகளில்' கட்டப்படும். தரைத்தளம், முதல் தளத்துடன் கூடிய மையம் "மாதிரி ஒன்று' என வரையறுக்கப்பட்டுள்ளது. இதேபோல, தரைத்தளத்துடன் கூடிய மையத்துக்கு "மாதிரி இரண்டு', "மாதிரி மூன்று' என வரையறுக்கப்பட்டுள்ளது.

மாதிரி ஒன்றுக்கான கட்டடம் ரூ.131.31 லட்சத்தில், 381.16 சதுர மீட்டரில் கட்டப்படுகிறது. மாதிரி இரண்டுக்கான கட்டடம் ரூ.80.23 லட்சத்தில் 203.80 சதுர மீட்டரில் கட்டப்படுகிறது. மாதிரி மூன்றுக்கான கட்டடம் ரூ.36.98 லட்சத்தில் 108.48 சதுர மீட்டரில் கட்டப்படுகிறது.

இந்த மையத்தில் விவசாயிகள், சுய உதவிக்குழுக்களுக்கான பயிற்சி மையம், கணினி அறை, நூலக அறை, நிர்வாக அலுவலகம், ஆலோசனை வழங்கும் அறை, கழிப்பறைகள், குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அனைத்து நவீன வசதிகளும் இடம்பெறவுள்ளன. இதன்படி, மாதிரி ஒன்றில் தலா ரூ.131.31 லட்சம் மதிப்பில் 56 மையங்கள் கட்டப்படவுள்ளன.

மாதிரி இரண்டில் தலா ரூ.80.23 லட்சத்தில் 60 மையங்கள் கட்டப்படவுள்ளன. மாதிரி மூன்றில் தலா ரூ.36.98 லட்சத்தில் 10 மையங்கள் கட்டப்படவுள்ளன.

நாமக்கல்லில் 24 மையங்கள்: தமிழகத்தில் அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 24 மையங்கள் கட்டப்பபடவுள்ளன. இதற்கு அடுத்தபடியாக திருப்பூர், விருதுநகர் மாவட்டங்களில் தலா 12 மையங்கள் கட்டப்படுகின்றன. சேலத்தில் 10 மையங்களும், கரூர் மாவட்டத்தில் 8, திருவண்ணாமலையில் 7, ஈரோடு மற்றும் கோயம்புத்தூரில் தலா 6, திருச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தலா 4, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூரில் தலா 3, செங்கல்பட்டு, தென்காசி, விழுப்புரம் மாவட்டங்களில் தலா 2 மையங்கள் கட்டப்படவுள்ளன.

தருமபுரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, மதுரை, நாகப்பட்டினம், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவள்ளூர், திருவாரூர், தூத்துக்குடி, பெரம்பலூர், வேலூர், கடலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் தலா ஒரு மையம் கட்டப்படவுள்ளன.

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டத்தில் ஆதிதிராவிடர் காலனி, புதுக்கோட்டை உள்ளூர், அய்யனாபுரம் ஆகிய 3 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. புதுக்கோட்டை மாவட்டத்தில் செங்களூர் ஊராட்சி, ஒடுக்கூர், எடையாத்தூர் அம்பாள்புரம் ஆகிய 3 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

திருச்சி மாவட்டத்தில் கே.கள்ளிக்குடி, புள்ளம்பாடி நம்புகுறிச்சி, பொன்னுசங்கம்பட்டி கள்ளிக்குடி, தண்டலை சுக்கம்பட்டி ஆகிய 4 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. பெரம்பலூர் மாவட்டத்தில், குன்னம் வட்டத்துக்குள்பட்ட பேரளி மருவத்தூர் கிராமம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் குப்பம், நாகம்பள்ளி, வெள்ளியணை வடக்கு, பண்ணப்பட்டி, இனுங்கூர், ஆண்டாங்கோவில் மேற்கு, கூடலூர் கிழக்கு, புஞ்சைகடம்பங்குறிச்சி ஆகிய 8 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

ஒப்பந்தப்புள்ளி கோரல்: இது தொடர்பாக, ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின நலத்துறை வட்டாரத்தினர் கூறுகையில், தாட்கோ நிறுவனத்தின் மூலம் வழங்கப்பட்ட திட்ட வரைவை அடிப்படையாகக் கொண்டு தமிழகம் முழுவதும் ஆதிதிராவிட, பழங்குடியின கிராம மக்களுக்காக பிரத்யேகமாக இந்த அறிவுசார் மையங்கள் கட்டப்படுகின்றன.

நபார்டு வங்கியின் 2025-26ஆம் ஆண்டுக்கான ஊரக அடிப்படை கட்டமைப்பு மேம்பாடு நிதியிலிருந்து இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்ட மாவட்டங்களில் உள்ள எந்தெந்த ஊராட்சிகளுக்குள்பட்டு இந்த மையங்கள் கட்டப்படவுள்ளன என்ற விவரங்களுடன் அந்தந்த மாவட்ட நிர்வாகங்களுக்கு பட்டியலும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, கட்டுமானப் பணிக்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு, மையங்கள் கட்டுவற்கான ஏற்பாடுகள் விரைவில் தொடங்கப்படும் என்றனர்.

சடையாண்டி நகரில் அறிவுசார் மையம்

திருச்சி மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட மணிகண்டம் ஒன்றியம், கே.கள்ளிக்குடி ஊராட்சி, பூங்குடி கிராமம், சடையாண்டி நகரில் அறிவுசார் மையம் அமைக்க ரூ.1 கோடியே 31 லட்சத்து 31 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பட்டியலின மக்கள் அதிகம் வசிக்கும் பூங்குடி - சடையாண்டி நகருக்கு அறிவுசார் மையம் வேண்டும் என கடந்த 05.06.2025 அன்று ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மா.மதிவேந்தனுக்கு கடிதம் மற்றும் அலைபேசி வாயிலாக தொகுதி எம்.பி. துரை வைகோ வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அதையேற்று, கள்ளிக்குடி ஊராட்சிக்குள்பட்ட சடையாண்டி நகரில் ரூ.121.31 லட்சத்தில் அறிவுசார் மையம் அமைக்க நிர்வாக அனுமதியும், நிதி ஒதுக்கீடு செய்வதற்கான ஆணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை

மின்சாரம் பாய்ந்து தச்சுத் தொழிலாளி உயிரிழப்பு

திருவெண்ணெய் நல்லூா் அருகே கோயிலிலுக்குப் பூட்டு: கிராமத்தில் பதற்றம்

டாஸ்மாக் மதுக்கடைகள் இன்று திட்டமிட்டப்படி மூடல், ஆா்ப்பாட்டம்

விழுப்புரம் பெண்ணிடம் ரூ. 27.42 லட்சம் இணையவழயில் மோசடி

SCROLL FOR NEXT