திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அனைவரும் ஓரணியில் நின்று மதவாத அரசியலை தொடக்கத்திலேயே முறியடிக்க வேண்டும் என்று நாம்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், மதுரையிலுள்ள திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவதை முன்வைத்துக் கலவரத்தை தூண்ட முயலும் மதவாத கும்பல்களின் பிரித்தாளும் அரசியல் வன்மையான கண்டனத்துக்குரியது. ஏற்கனவே, திருப்பரங்குன்றம் மலையில் வழிபாடு சிக்கலாகவும், அரசியலாகவும் ஆக்கப்பட்டுவிட்ட நிலையில், இதுநாள்வரை பின்பற்றாத ஒரு நடைமுறையைச் சட்டத்தின் வாயிலாகப் புகுத்தி, தர்காவுக்கு அருகாமையில் தீபமேற்ற அனுமதிப்பது தேவையற்ற பிரிவினைகளுக்கே வழிவகுக்கும். ராமஜென்ம பூமியை வழிபடத்தான் போகிறோமென உச்ச நீதிமன்றத்தில் கூறிய இதே மதவாத கும்பல், பாபர் மசூதியை அயோத்தியில் என்ன செய்தது என்பதை நாடறியும்.
அதுபோல, மதுரை மண்ணை இன்னொரு அயோத்தியாக மாற்றும் சூழ்ச்சிக்கு நீதித்துறையே துணைநிற்பது வெட்கக்கேடானதாகும். சமூக அமைதியை சீர்கெடுக்கும் நோக்கோடு செய்யப்படும் இத்தகைய சதிச்செயல்கள் ஒருபோதும் ஏற்புடையதல்ல. மதம் கடந்த ஒற்றுமையைப் போற்றிக் காத்து வரும் மகத்துவம் மிகுந்த மதுரை மண்ணில் மதமோதலை உருவாக்குவதற்காகக் குறிவைத்து நடத்தப்படும் இந்துத்துவ அமைப்புகளின் மதவாத அரசியல் செயல்பாடுகள் யாவும் தொடக்கத்திலேயே முறியடிக்கப்பட வேண்டியதாகும்.
நாடு விடுதலை பெற்ற நாளில் எந்த நிலையில் வழிபாட்டுத்தலங்களும், அதன் தன்மையும் இருந்ததோ அதே நிலையே தொடர வேண்டுமென்கிறது 1991ஆம் ஆண்டு இயற்றப்பட்ட வழிபாட்டுத்தலங்கள் சட்டம். அச்சட்டத்தின்படி, திருப்பரங்குன்றம் மலையில் ஏற்கனவே இருந்த வழிபாட்டு முறைகளும், நடைமுறைகளுமே தொடருவதே சரியானதாக இருக்கும்.
அந்த வகையில், காலங்காலமாக தீபமேற்றும் இடத்தைவிடுத்து, தர்காவுக்கு அருகில் புதிய இடத்தில் தீபமேற்ற அனுமதிப்பது தேவையற்ற ஒன்றாகும். பொதுமக்கள் தங்களது மனஅமைதிக்காகவும், மெய்யியல் நம்பிக்கைக்காகவும் வழிபடும் வழிபாட்டுத்தலங்களையே பதற்றத்துக்குரிய இடமாக மாற்றுவது இழிவான அரசியலாகும்.
‘நீதித்துறை, நிர்வாகத்துறை, சட்டமன்றம் எனும் இம்மூன்றும் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டால், அரசியலமைப்புச்சட்டம் தோல்வி அடைந்ததாகப் பொருள் என்கிறார்’ அம்பேத்கர். அத்தகைய நிலையில், தற்காலச்சூழல் மாறியிருப்பது கெடுவாய்ப்பானதாகும். மதவாதிகளின் பிரித்தாளும் சூழ்ச்சியை முறியடித்துச் சமத்துவத்தை நிலைநாட்ட மண்ணின் மக்கள் தமிழர் எனும் இன உணர்வோடு திரள்வதே ஓர்மைக்கான ஒற்றைப் பெருவாய்ப்பாகும்.
திருப்பரங்குன்றம் மலையை வைத்து மதுரையில் மதமோதலை உருவாக்கி, மக்களைப் பிளவுபடுத்த முற்படும் சதிச்செயல்களை சாதி, மதம் கடந்து மொழியால் நாம் அனைவரும் தமிழர்கள் என்ற இன அடையாளத்தோடு ஒற்றுமை உணர்வுடன் ஓரணியில் நின்று முறியடிப்போம்! இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.