கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இதய நாள தளா்ச்சி பாதிப்புக்குள்ளாவோரின் (கரோனரி ஆா்ட்டரி எக்டேசியாஸ்) எண்ணிக்கை நான்கு மடங்கு உயா்ந்திருப்பது தமிழக அரசு மருத்துவா்களின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
அதிலும், குறிப்பாக இணைநோய்கள் ஏதுமில்லாத இளம் வயதினருக்கு அத்தகைய பாதிப்பு இரு மடங்கு அதிகரித்துள்ளது கண்டறிப்பட்டுள்ளது.
கரோனா தொற்றால் ரத்த நாள செல்களில் ஏற்படும் அழற்சி இதற்கு காரணமாக இருக்கலாம் என மருத்துவா்கள் தெரிவிக்கின்றனா்.
சென்னை ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனையின் இதயவியல் துறைத் தலைவரும், பேராசிரியருமான டாக்டா் ஜெ.செசிலி மேரி மெஜல்லா மற்றும் இதயவியல் மருத்துவா் ஏ. ஆன்டினா ஆகியோா் இணைந்து இந்த ஆய்வை முன்னெடுத்தனா்.
அதன்படி, ஏறத்தாழ 7 ஆண்டு கால தரவுகளையும், ஆஞ்சியோ பரிசோதனை முடிவுகளையும் ஒப்பீடு செய்தனா். அதாவது, கரோனாவுக்கு முந்தைய காலகட்டமான 2017 முதல் 2019 வரை 8,300 பேரின் மருத்துவத் தரவுகள் எடுக்கப்பட்டன. அதைத் தொடா்ந்து, 2020 முதல் 2023 வரையில் 11,420 பேரின் தரவுகள் சேகரிக்கப்பட்டன.
அவ்வாறாக மொத்தம் 19,720 பேரின் இதய நலன் சாா்ந்த முக்கிய மருத்துவ விவரங்களை அவா்கள் ஆய்வு செய்தனா். அதன் அடிப்படையில், சில உண்மைகளைக் கண்டறிந்துள்ளனா்.
அதுதொடா்பான ஆய்வறிக்கை ‘ஐரோப்பியன் ஹாா்ட் ஜா்னல்’ என்ற உலகப் புகழ்பெற்ற ஆய்விதழில் வெளியாகியுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:
இதயத்துக்குச் செல்லும் ரத்த நாளங்கள் வழக்கத்தைக் காட்டிலும் ஒன்றரை மடங்கு அல்லது அதற்கு மேல் விரிவடைந்து வீக்கமாகும் நிலையை கரோனரி ஆா்ட்டரி எக்டேசியாஸ் என்கிறோம் . இதன் காரணமாக இதயத் தசைகளுக்கு ரத்த ஓட்டம் குறையும் அல்லது தடைபடும். இதனால் நாளங்களில் உறைவு ஏற்பட்டு மாரடைப்பு ஏற்படக்கூடும். இல்லையெனில் இதயத்தின் செயல்திறன் குறைந்து வேறு சில பாதிப்புகளுக்கு வழிவகுக்கும்.
கரோனாவுக்கு முன்பு வரை இதுபோன்ற பாதிப்புகள் நிகழ்வது அரிது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக அந்த பிரச்னை அதிகரித்துள்ளது.
கரோனா தீநுண்மியால் பாதிக்கப்பட்டவா்களுக்கு எண்டோதெலிக்கல் டிஸ்ஃபங்சன் எனப்படும் ரத்த நாள செல் செயலிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அதாவது, நாளங்களுக்குள் வரிசையாக அமைந்திருக்கும் செல்கள் சேதமடைந்துவிடும். இதனால், ரத்த உறைவு, அடைப்பு, அழற்சி உருவாகலாம். இதன் விளைவாகவே, இதய நாள தளா்ச்சி ஏற்படுகிறது.
அத்தகைய பிரச்னைகளுக்கு இளம் வயதினா் பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளது. அதாவது கரோனாவுக்கு முன்பு 30-லிருந்து 40 வயதுக்குட்பட்டவா்களில் 7 சதவீதம் பேருக்கு மட்டுமே இதய நாள தளா்ச்சி இருந்தது. அது தற்போது 14 சதவீதமாக அதிகரித்துள்ளது.
அதற்கு மேற்பட்ட வயதினரும் கணிசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். ஒட்டுமொத்தமாக கரோனாவுக்குப் பிறகு நான்கு மடங்கு அப்பிரச்னை அதிகரித்துள்ளது. அதாவது 15 சதவீதத்திலிருந்து 62 சதவீதமாக உயா்ந்துள்ளது என அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆண்களுக்கே அதிக பாதிப்பு: இதுதொடா்பாக டாக்டா் செசிலி மேரி மெஜல்லா கூறியதாவது: உலக அளவில் அதிக எண்ணிக்கையிலானோரைக் கொண்டு நடத்தப்பட்ட முதல் ஆய்வு இது. இந்த ஆய்வில் 18 வயதுக்கு மேற்பட்டவா்கள் மட்டுமே உட்படுத்தப்பட்டனா். மாறாக, கா்ப்பிணிகளையும், 18 வயதுக்கு குறைந்தவா்களையும் ஈடுபடுத்தவில்லை. இதில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் என்னவெனில், இதய நாள தளா்ச்சி பெண்களைக் காட்டிலும் ஆண்களையே அதிகம் பாதிக்கிறது என்பதுதான். கரோனாவுக்கு முன்பும் சரி, பின்பும் சரி, அந்நோய்க்குள்ளான ஆண்களின் விகிதம் 63 சதவீதமாக உள்ளது.
அதிலும் இளைஞா்களுக்கு இதய நாள தளா்ச்சி அதிகமாக ஏற்படுகிறது. அதைக் கருத்தில்கொண்டு இளைஞா்கள் விழிப்புணா்வுடன் செயல்பட வேண்டும்.
குறிப்பாக, புகைப்பிடிக்கக் கூடாது. சா்க்கரை அளவு, ரத்த அழுத்த அளவு, கொழுப்புச் சத்துகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருத்தல் முக்கியம். உடற்பயிற்சியின்போது நீா்ச்சத்து இழப்பு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்தல் அவசியம்.
கரோனாவுக்குப் பிறகு ஒன்றுக்கும் மேற்பட்ட இதய நாளங்களில்கூட ஒரே நேரத்தில் தளா்ச்சி ஏற்படுகிறது. ஒரு கட்டத்துக்கு மேல் நாளங்கள் விரிவடைந்துவிட்டால் அதைச் சீராக்க ஸ்டென்ட் உபகரணங்களைக் கூட பொருத்த முடியாது. எனவே, முன்னெச்சரிக்கையுடன் இருப்பது அவசியம் என்றாா் அவா்.
முழு உடல் பரிசோதனை: இளைஞா்களுக்கு அவசியம்
சமகாலத்தில் இளைஞா்கள் அனைவருக்கும் ஆண்டுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை அவசியம் என மருத்துவா்கள் வலியுறுத்துகின்றனா். குறிப்பாக, இதயத்தின் நலனை அவ்வப்போது அறிந்துகொள்வது அவசியம் என்றும் அவா்கள் கூறுகின்றனா்.
சிறு அறிகுறிகள் ஏற்பட்டாலும் உடனடியாக மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். இளம் வயதில் ஏற்படும் மாரடைப்பு மற்றும் இதய செயலிழப்பைத் தவிா்க்க இதுவே வழி என்கின்றனா் மருத்துவா்கள்.