தமிழகத்தில் ஹிந்துக்கள் தங்களின் தர்மத்தை பின்பற்றுவதற்காக சட்டப் போராட்டங்களை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாக ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.
மேலும், அரசியலமைப்புச் சட்டமானது கீதையின் சாராம்சத்திலிருந்தே உருவானவை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபத்தன்று தீபம் ஏற்ற உத்தரவிடக் கோரி ஹிந்து அமைப்பினர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீபத்தூணில் தீபம் ஏற்ற கோயில் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டார்.
ஆனால், வழக்கமாக ஏற்றப்படும் உச்சி பிள்ளையார் கோயில் அருகே மட்டும் தீபம் ஏற்றப்பட்டது. சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதால் மலை மீது தீபம் ஏற்ற மதுரை காவல்துறையினர் அனுமதிக்கவில்லை.
இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே தமிழக அரசை கண்டித்து சமூக வலைதளத்தில் பவன் கல்யாண் பதிவிட்டிருந்த நிலையில், ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு திங்கள்கிழமை பேட்டி ஒன்று அளித்துள்ளார்.
அதில், அவர் தெரிவித்ததாவது:
“சநாதன தர்மம் என்பது குருட்டு நம்பிக்கை கிடையாது. அது மனிதகுலத்திற்கு ஞானத்தின் அறிவியல் பாதையை அளித்த ஒரு ஆன்மிக அறிவியல் ஆகும். மற்றவர்கள் நமது தர்மத்தைத் தாக்குகிறார்கள் என்று சொல்வதற்குப் பதிலாக, முதலில் நாமே அதைப் பாதுகாக்கக் கற்றுக்கொண்டு, குரல் கொடுக்க வேண்டும். அப்போதுதான் யாருக்கும் நம்மைத் தாக்கும் தைரியம் வராது.
தமிழகத்தில் ஹிந்துக்கள் தங்களின் தர்மத்தை பின்பற்றுவதற்காக சட்டப் போராட்டங்களை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இனி இதுபோன்ற நிலைமைகள் மீண்டும் வராமல் இருக்க ஒவ்வொரு ஹிந்துவும் விழிப்புணர்வும் எச்சரிக்கையும் உடையவராக மாற வேண்டும்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையில், அரசுக் கொள்கைகளின் வழிகாட்டு நெறிமுறைகள் (Directive Principles) இருக்கும் பக்கத்தில் ஸ்ரீகிருஷ்ணர் அர்ஜுனனுக்கு பகவத் கீதை உபதேசம் செய்யும் ஓவியம் உள்ளது. அந்த ஓவியம் வெறும் அலங்காரம் அல்ல. அரசியலமைப்புச் சட்டத்தின் மதிப்பீடுகளான சமூக நீதி, பொறுப்புணர்வு, சமத்துவம், நலவாழ்வு, தர்மத்தை நிலைநாட்டுதல் ஆகியவை கீதையின் சாராம்சத்திலிருந்தே உருவானவை என்பதை அந்த ஓவியம் உணர்த்துகிறது.
தர்மம் என்பது நீதியின் தார்மிக வழிகாட்டி, அரசியலமைப்புச் சட்டம் என்பது நீதியின் சட்டரீதியான வழிகாட்டி. இரண்டும் ஒரே இலக்கை நோக்கமாகக் கொண்டுள்ளன. நீதி, அமைதி, கருணை ஆகியவற்றால் கட்டமைக்கப்பட்ட ஒரு சமுதாயம்.” எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.