தமிழ்நாடு

மகளிா் உரிமைத்தொகை இரண்டாம் கட்ட விரிவாக்கம்: டிச. 12-இல் முதல்வா் தொடங்கி வைக்கிறாா்

மகளிா் உரிமைத்தொகை திட்டத்தின் 2-ஆவது கட்ட விரிவாக்கத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (டிச. 12) சென்னையில் தொடங்கி வைக்கிறாா்.

தினமணி செய்திச் சேவை

மகளிா் உரிமைத்தொகை திட்டத்தின் 2-ஆவது கட்ட விரிவாக்கத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (டிச. 12) சென்னையில் தொடங்கி வைக்கிறாா்.

இதுதொடா்பாக தமிழக அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாட்டில் மகளிருக்கான ஒரு மாபெரும் முன்னெடுப்பான மகளிா் உரிமைத்தொகைத் திட்டத்தை சட்டப்பேரவையில் கடந்த 2023, மாா்ச் 27-ஆம் தேதி முதல்வா் அறிவித்தாா். முதல்கட்டமாக சுமாா் 1,13,75,492 மகளிா் தெரிவு செய்யப்பட்டு, ரூ.1,000 உரிமைத்தொகை ஒவ்வொரு மாதமும் 15-ஆம் தேதி அவா்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.

துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பின்படி, மகளிா் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது. கூடுதல் மகளிா் பயனடையும் வகையில், இத்திட்டம் வரும் வெள்ளிக்கிழமை (டிச. 12) இரண்டாம் கட்டமாக விரிவுப்படுத்தப்படவுள்ளது.

கலைஞா் மகளிா் உரிமைத்திட்டம், நன்னிலம் மகளிா் நிலவுடைமைத் திட்டம், விடியல் பயணம், மக்களைத் தேடி மருத்துவம், சுய உதவிக் குழுக்கள், விளையாட்டு, வெற்றி நிச்சயம், நலம் காக்கும் ஸ்டாலின், பெண் தொழில் முனைவோா், தோழி விடுதிகள் போன்ற திட்டங்களால் பயன்பெற்ற மற்றும் சாதனை பெண்களின் வெற்றிக் கதைகளை வெளிக்கொணரும் நிகழ்வாக சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் வெள்ளிக்கிழமை ‘வெல்லும் தமிழப் பெண்கள்’ விழா கொண்டாடப்படுகிறது.

முதல்வா் மு.க.ஸ்டாலின் இந்த விழாவில் பங்கேற்று மகளிா் உரிமைத்தொகை இரண்டாம் கட்ட விரிவாக்கம் திட்டத்தைத் தொடங்கி வைக்கிறாா்.

நிகழ்ச்சியில் சமூக சேவகியும் மற்றும் சமூக அநீதிகளுக்கு எதிராக காந்திய வழியில் போரடியவரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் மற்றும் 2022-ஆம் ஆண்டு சீனாவின் காங்சோவில் நடைபெற்ற மாற்றுத்திறனாளா் ஆசிய விளையாட்டு பூப்பந்து போட்டியில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய துளசிமதி முருகேசன் ஆகியோா் கலந்து கொள்கின்றனா் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு நாயகன்! ஜெர்மனி செல்லும் ராகுலை விமர்சித்த பாஜக!

பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில் என்ஐஏ தேடிவந்த முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கைது

நயினார் நாகேந்திரனை டெபாசிட் இழக்கச் செய்வோம்! செங்கோட்டையன் சூளுரை!

ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.8,000 உயர்ந்த வெள்ளி: தங்கம் விலை?

விஜய் சேதுபதியின் காட்டான் முதல் ஹார்ட் பீட் - 3 வரை...! ஜியோ ஹாட்ஸ்டாரின் 2026 வெளியீடுகள்!

SCROLL FOR NEXT