புதுச்சேரி பொதுக் கூட்டத்தில் தவெகவினரை அனுமதிப்பது தொடர்பான விவகாரத்தில், ஆனந்தை அனல் பறக்கும் வார்த்தைகளால் அலறவிட்டார் ஐபிஎஸ் அதிகாரி இஷா சிங்.
புதுச்சேரியில் தவெக பொதுக் கூட்டத்துக்கு அனுமதி வழங்குவது முதல், விதிமுறைகள் வரை பல நாள்களாக பரபரப்பாக பேசப்பட்டாலும், இன்று கூட்டம் பெரிய அளவில் பேசப்பட வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.
காரணம், தவெக தலைவர் விஜய் வெறும் 11 நிமிடங்களில், புதுச்சேரி அரசுக்கு பாராட்டு, புதுச்சேரியின் தேவை என சில பட்டியல்களுடன் குறுஞ்செய்தி போல பேசி முடித்ததே காரணம் எனலாம்.
ஆனால், புதுச்சேரி தவெக கூட்டத்தில் விஜயை விட அதிகம் அனல் பறக்க பேசியது என்றால் அது இஷா சிங் ஐபிஎஸ் என்றுதான் சொல்ல வேண்டும்.
கரூரில் நடைபெற்ற தவெக கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியான நிலையில், புதுச்சேரியில் இன்று உப்பளம் துறைமுக அரங்கில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில், நடிகரும், தவெக தலைவருமான விஜய் பேசினார்.
இந்தக் கூட்டத்துக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே பாஸ் வைத்திருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கூட்டம் குறைவாக இருந்ததால் பாஸ் இல்லாத தவெக தொண்டர்கள் சிலரை பொதுச் செயலர் ஆனந்த் கூட்டத்துக்குள் அனுமதிக்க முயன்றார்.
ஆனால், அந்த இடத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்து ஐபிஎஸ் அதிகாரி இஷா சிங், ஆனந்தை தடுத்து நிறுத்தி, நான் என்ன செய்ய வேண்டும் என நீங்கள் சொல்லாதீர்கள். உங்களால் பலர் இறந்திருக்கிறார்கள் என்று கடுமையாகக் கூறி, ஆனந்த் உள்ளே அழைத்த தொண்டர்களை, உள்ளே நுழைய விடாமல் தடுத்தார்.
நூற்றுக்கணக்கான தொண்டர்களுக்கு மத்தியில், உரிய விதிப்படி, கட்டுப்பாடுகளுடன் கூட்டம் நடப்பதற்காக, கட்சி நிர்வாகி என்றும் பாராமல், கடுமையாகப் பேசிய விடியோ இணையத்தில் உடனடியாக வெளியானது. அவ்வளவுதான், பலரது கவனத்தையும் இஷா சிங் பெற்றுவிட்டார். சிங்கப் பெண்ணாகக் கொண்டாடத் தொடங்கி விட்டனர் சமூக வலைத்தள மக்கள். இவர், இன்று தவெக கூட்டத்துக்கான செய்திகளுடன் முக்கியத் தலைப்புச் செய்தியாகவும் மாறிவிட்டார்.
யார் இந்த இஷா சிங்?
இஷா சிங், புதுச்சேரியின் லஞ்ச ஒழிப்புத் துறை எஸ்.பி.யாக பணியாற்றியவர். தற்போது எஸ்எஸ்பியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
மகாராஷ்டிரத்தில் பிறந்த இஷா சிங்கின் அப்பாவும், தாத்தாவும் ஐபிஎஸ் அதிகாரிகளாம். தேசிய சட்டப் பள்ளியில் சட்டம் படித்த இஷா சிங், மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞராக பணியைத் தொடங்கியிருக்கிறார். அங்கு, விஷவாயு தாக்கி உயிரிழந்த மலம் அள்ளும் தொழிலாளர்களின் மனைவிகளுக்கு, மிகப்பெரிய அதிகாரம் மிக்க நபர்களை எதிர்த்து வழக்காடி, இழப்பீடு பெற்றுத் தந்துள்ளார். ஒவ்வொரு பெண்ணுக்கும் ரூ.10 லட்சம் நிவாரணம் பெற்றுக் கொடுத்துள்ளார்.
இந்த சட்டப்போராட்டத்தின்போது, எந்த பேதமும் இன்றி சட்டத்தை அமல்படுத்தும் பதவிக்கு வர வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டு, அதைத் தொடர்ந்து ஐபிஎஸ் தேர்வெழுதி தனது கனவை நனவாக்கியவர் இஷா சிங்.
ஐபிஎஸ் நேர்காணலின் போது, இஷா சிங்கிடம் எழுப்பப்பட்ட சில கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் அப்போதே மிகவும் பிரபலமடைந்திருந்தது.
அதாவது, 2020ஆம் ஆண்டு யுபிஎஸ்சி தேர்வெழுதி 191வது ரேங்க் பெற்ற இஷா சிங், பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை தொடர்பான சட்டப்பிரிவு 498 ஏ, தவறாகப் பயன்படுத்தப்படுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு இஷா சிங் அளித்த பதிலில், 498 ஏ- பிரிவின் கீழ் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படும் சம்பவங்களும் நடக்கின்றன. சட்டத்தை தவறாகப் பயன்படுத்துவது என்பது வழக்கமான ஒன்றுதான். பெண்கள் வீடுகளில் வன்முறையை எதிர்கொள்ளும் சம்பவம் அதிகமாக உள்ளது. எனவே, பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் இந்த சட்டம் மிகவும் அவசியமானது. மும்பையில் உள்ள குடிசை வீடுகளில் வாழும் பெண்கள் குடும்ப வன்முறைக்கு ஆளாகிறார்கள். அது ஒருபோதும் பதிவு செய்யப்படுவதில்லை என்று பதிலளித்திருந்தார்.
ஐபிஎஸ் பதவியேற்று நேர்மையுடனும் கண்ணியத்துடனும் பணியாற்றி மக்களின் ஆதரவையும் பெற்றவர்.
இவர் சமூக ஆர்வலராகவும், பெண்களின் நலனுக்காக பாடுபடுபவராகவும் விளங்கி வருகிறார். தொடர்ந்து பல சமூக நலன் சார்ந்த வழக்குகளிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.