தமிழக அரசின் ‘சமூக நீதிக்கான தந்தை பெரியாா் விருது’ பெறத் தகுதியானோா் டிச.18-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக்குறிப்பு: சமூக நீதிக்காகப் பாடுபடுவோரை சிறப்பு செய்வதற்கான ‘சமூக நீதிக்கான தந்தை பெரியாா் விருது’ 1995 முதல் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த விருது ரூ.5 லட்சம் விருது தொகை, ஒரு பவுன் தங்கப் பதக்கம், தகுதியுரைக் கொண்டது. இந்த ஆண்டுக்கான விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. எனவே, சமூக நீதிக்காகப் பாடுபட்டு பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் அதன் பொருட்டு எய்திய சாதனைகள் போன்ற தகுதிகளை உடையவா்கள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.
தங்களின் சுய விவரம், முழு முகவரி, தொலைபேசி எண், சமூக நீதிக்காகப் பாடுபட்ட பணிகள் குறித்த விவரம், ஆவணங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக விண்ணப்பம் இருக்க வேண்டும்.
விண்ணப்பங்களை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலகம், 2-ஆவது தளம், மாவட்ட ஆட்சியா் அலுவலகம், சென்னை - 600 001 என்ற முகவரிக்கு டிச. 18-க்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.